தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உருக்கமாகப் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை விவாதங்களின்போது ஏற்பட்ட தொடர் வாக்குவாதங்கள், கூச்சல், குழப்பங்கள் மற்றும் உறுப்பினர்களின் அணுகுமுறையால் மனவேதனை அடைந்த சபாநாயகர், அவையின் மாண்பையும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“உங்களுக்கு எல்லாம் ஒரு உண்மையைச் சொல்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கிய அவர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து விவாதிக்க வேண்டும் என்றும், வெறும் அரசியல் மோதல்கள் மற்றும் வாக்குவாதங்களுக்காக அவையின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
“இப்படிப் பேசி நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பேரவையின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் கவனிக்கப்படுவதால் உறுப்பினர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
தனது உடல்நிலை குறித்தும் சபாநாயகர் உருக்கமாகப் பேசினார். “கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு Low Pressure ஆகிவிட்டது. நல்லவேளை, இன்று அவையில் நடப்பவற்றைப் பார்த்ததும் மருத்துவர் இல்லாமலேயே எனக்கு Pressure ஏறிவிட்டது” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தொடர் கூச்சல் மற்றும் குழப்பங்களால் ஏற்பட்ட மன உளைச்சலை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஆற்றிய உரைக்கும், திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதமே அவையில் அமளிக்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, “முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்று சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து குறுக்கீடு செய்த திமுக உறுப்பினர்களை நோக்கி, “உங்களுக்குப் பேச எந்த உரிமையும் கிடையாது, உட்காருங்கள்” என்றும் எச்சரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, “உங்கள் மிரட்டலுக்குப் பணியும் ஆள் நான் இல்லை” என்று சபாநாயகர் ஆவேசமாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளிக்கலாம் என முதலமைச்சர் விஜய் சைகை காட்டியதாகவும், அதனை ஏற்காமல் சட்டப்பேரவை விதிமுறைகளின்படியே தான் செயல்படுவேன் என சபாநாயகர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. “முதலமைச்சர் சொல்லியிருந்தாலும் நான் விதிமுறைப்படிதான் நடப்பேன்” என்ற அவரது கருத்தும் கவனம் பெற்றுள்ளது.
அவையில் கூச்சலும் குழப்பமும் எல்லை மீறியபோது, மைக் ஆன் செய்யப்படாத நிலையிலும் சபாநாயகரின் குரல் அவை முழுவதும் எதிரொலித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உறுப்பினர்களை நோக்கி, “நான் சொல்வதைக் கேளுங்கள்… இதுதான் உங்களுக்கு Last Warning” என்று அவர் கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தவெக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி மற்றும் அரசியல் உறவுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச முற்பட்டபோது, இதுபோன்ற அரசியல் உறவுகள் குறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டாம் எனவும் சபாநாயகர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற பேரவை நடவடிக்கைகள் தொடர்பாக சபாநாயகர் விளக்கம் அளித்தார். விதிகளுக்கு புறம்பாக முதலமைச்சர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், விதிகளுக்கு உட்பட்டு உரிய ஆதாரங்களை மட்டுமே வெளியிட்டு அவர் பேசியதாகவும் தெரிவித்தார்.
‘பாயிண்ட் ஆஃப் ஆர்டர்’ என்ற முறையில் ஒரு உறுப்பினர் பேசத் தொடங்கியபோது, அவர் என்ன கூற வருகிறார் என்பது தெளிவாகத் தெரியாததால் பேச அனுமதித்ததாகவும், பின்னர் சட்டத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளித்ததாகவும் கூறினார். அதன் பின்னர், பேரவை நடவடிக்கைகளில் இடம்பெற்றவற்றை நீக்க முடியாது எனத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.
பேரவை நடவடிக்கைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டிய நிலையில், சபையைத் தொடர்ந்து நடத்தவிடாமல் சில உறுப்பினர்கள் செயல்பட்டது தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் சபாநாயகர் கூறினார். மூத்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், அமைதியாக இருந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தங்களது தலைவர்கள் கற்றுக்கொடுத்த நல்ல பண்புகளை அவர்கள் கடைப்பிடித்ததாகப் பாராட்டினார். “அவை நடவடிக்கைகளின் மாண்புதான் எனக்கு முக்கியம். நாம் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் 210 மற்றும் 219-ன் கீழ் ரூ.2,000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டது. 2026-27ஆம் ஆண்டுக்கான சாலைத் திட்டப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான 80 பணிகளுக்கு முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீது வாக்களிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பே ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025-26ஆம் நிதியாண்டிலேயே 80 பணிகளுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எதிர்கால பட்ஜெட் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு ரூ.2,000 கோடி நிதிப் பொறுப்பு உருவாக்கப்பட்டதாகவும், இது சட்டப்பேரவையின் நிதி அதிகாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்து இது உரிமை மீறல் பிரச்சினையாகக் கருதப்படுமா அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் குறித்தும் சட்டப்பேரவையில் கவனம் ஈர்க்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருவதாகக் கூறப்பட்டது.
2013 முதல் 2024 நவம்பர் வரை ஓய்வூதியம், பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்கள் வழங்கப்பட்ட நிலையில், 2024 செப்டம்பர் முதல் 246 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள பணப்பலன்கள், பதவி உயர்வுகள், ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும், தொகுப்பூதியர், NMR மற்றும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சிறப்பு மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் ஏழாவது ஊதியக்குழு பலன்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளருடன் ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், பணப்பலன்கள், பதவி உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து தொகைகளும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொலைதூரக் கல்வி பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே படித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாத பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
