நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் காதலிப்பதாக கூறி ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அந்த மாணவியை நைசாக பேசி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது முருகேசன் மற்றும் அவரது நண்பர்களான முனீஸ்வரன், சின்னக்குட்டி ஆகியோர் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அபபோது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மூன்று பேரையும் போச்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் தண்டனை விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், 2வது குற்றவாளியான சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மூவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
