Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 7) திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கரூரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாநகராட்சி வளாகம் மற்றும் முக்கிய பகுதிகளில் பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் ரத்து செய்து, தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மேலும், தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், முறையான வார விடுமுறை வழங்க வேண்டும், பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அடிப்படை நலத்திட்டங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கையுறைகள், முகக்கவசங்கள், பாதுகாப்பு காலணிகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் வழங்கப்படாமல், தினமும் ஆபத்தான குப்பைகள் மற்றும் கழிவுகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  Don't miss it: 24 மணி நேரத்தில் நடந்த மிக முக்கிய சம்பவங்கள்…!

இதனிடையே, 50 வயதுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை பணிக்கு வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் மறைமுகமாக அறிவுறுத்தி வருவதாகவும் பணியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தங்களை, இந்த வயதில் வாழ்வாதாரமின்றி நிறுத்துவதா என மூத்த பணியாளர்கள் வேதனையுடனும் ஆவேசத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர், நகரின் பரப்பளவும் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளதுடன், குப்பைகளின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஏற்கனவே உள்ள பணியாளர்கள் மீது அதிகப்படியான பணிச்சுமை திணிக்கப்படுவதாகவும், அதற்கேற்ற வகையில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய இபிஎஃப், போனஸ் உள்ளிட்ட தொழிலாளர் நலச் சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  விஜய் கரூர் செல்லும் முன்பே செக் வைத்த நீதிமன்றம்.. 32 பேர் அரசு வேலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு!

இதேபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 16 நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டம், அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் அரசின் தற்காலிக உறுதிமொழியைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

சென்னையில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதன் தாக்கமும் அதிர்வலையும் தற்போது கரூர் மாநகராட்சியிலும் எதிரொலித்துள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சிப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணிநேரம் தொடர்பாக அண்மையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆட்சி மற்றும் அதிகாரிகள் மாற்றத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே பணிபுரிந்து வந்த தங்களை, தற்போது முழுநாளும் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்ற அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக பணியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை கிடைத்து வந்த வார விடுமுறையையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சியில் இன்று 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒரே இடத்தில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்தின் முக்கிய ஆலோசனைகள் மற்றும் வழக்கமான பணிகள் நடைபெற வேண்டிய நேரத்தில் இந்த திடீர் போராட்டம் தொடங்கியுள்ளதால் நிர்வாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  Exclusive: கரூரில் 2000 சதுரடி கரன்சி குடோன்..! எ.வ.வேலுவின் பினாமி நெட்வொர்க்..! பாஜக, அதிமுக இடங்களுக்கு மாறிய பல நூறு கோடி..?

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நீடித்தால், கரூர் மாநகராட்சியின் வழக்கமான தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருவதால், கரூர் மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்படுமா அல்லது போராட்டம் தொடர்ந்து தீவிரமடையுமா என்பது அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago