கேரளா மாநிலம் திருச்சசூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லாரி அடியில் சிக்கி இருந்த காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் உடல் நசுங்கி உயிரிழந்த 8 கல்லூரி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் நெடுஞ்சாலையில் கட்டுமான பணி நடந்து வருவதால் பனம்பிக்குனு என்ற இடத்தில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மாற்று பாதையின் அருகே நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதியுள்ளது.
உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் திண்டுக்கலில் உள்ள பிஎஸ்என்ஏ கல்லூரியில் படித்து வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த யுவ சஞ்சித், மதுரையை சேர்ந்த பிரசாந்த், சந்தோஷ், பிரச்சன்னா, சேலத்தை சேர்ந்த விஸ்வா உள்ளிட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
