ஆந்திரப் பிரதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாகக் கொண்டு ஆன்லைன் பெட்டிங் மூலம் பலர் பணத்தை இழந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் டாக்டர் சங்கப்ரதா பாக்சி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கோவாவை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் இந்த ஆன்லைன் போலீசார் அதிரடி நடவடிக்கைசூதாட்ட வலையமைப்பு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல் “First Store Play”, “Reddy Anna”, “Exchange 666” உள்ளிட்ட பெயர்களில் வெளிநாடுகளில் இருந்து பெட்டிங் செயலிகளை இயக்கி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவாவை தனது முக்கிய மையமாகக் கொண்டு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் டெலிகிராம் இணைப்புகள் மூலம் இளைஞர்களை கவர்ந்து, பல்வேறு நபர்களின் பெயர்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிரான்சைஸ் முறையில் இந்த சூதாட்ட வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்ததும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
குற்றவாளிகளின் மொபைல் தரவுகளை ஆய்வு செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார், இந்தக் கும்பல் கொல்கத்தாவில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் கொல்கத்தா ரீஜென்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், முக்கிய குற்றவாளியான பகாராணி கரண் உள்ளிட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 57 மொபைல் போன்கள், 130 வங்கி பாஸ்புக்குகள், 33 ஏடிஎம் அட்டைகள், 4 லேப்டாப்கள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், நாடு முழுவதும் 530 போலி வங்கி கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதில் ஆய்வு செய்யப்பட்ட 240 வங்கி கணக்குகள் மூலம் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 300 வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தால், 1000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது, வங்கி கணக்குகளில் இருந்த பல கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகைகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஆதாரங்கள், ஒருங்கிணைந்த கள நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்த கும்பலை விசாகப்பட்டினம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்ததாக காவல் ஆணையர் சங்கப்ரதா பாக்சி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் கமிஷனுக்காக யாரிடமும் தங்களது வங்கி கணக்குகளை வழங்க வேண்டாம் என்றும், வங்கி கணக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறைத்தண்டனை எதிர்நோக்க நேரிடலாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்
