”சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நீரை அதனிடமிருந்து பறிக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா மேற்கொள்ளக்கூடாது” என பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார் எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு மூத்த இந்திய அரசாங்க வட்டாரம், “இந்தியப் பொதுமக்களையும் பாதுகாப்புப் படையினரையும் தொடர்ந்து குறிவைக்கும் அதே வேளையில், முழுமையான மற்றும் நிபந்தனையற்ற தரவுப் பகிர்வை பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது” என்று கூறியுள்ளது. இதன் மூலம், “இரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது” என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
“நீர் பாதுகாப்பும் தேசியப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியப் பொதுமக்களையும் பாதுகாப்புப் படையினரையும் தொடர்ந்து குறிவைக்கும் அதே வேளையில், இந்தியாவிடம் இருந்து முழுமையான, நிபந்தனையற்ற இணக்கத்தையும் தரவுப் பகிர்வையும் பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது. பிரிட்டனில் சிந்து நதி நீர் பிரச்சினையை எழுப்பி, இஷாக் டார் இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்க முயன்றார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் முழுமையாகச் செல்லுபடியாகும், கட்டுப்படுத்தக்கூடியது, அமல்படுத்தக்கூடியது என்று தார் கூறியதோடு, அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்யும் இந்தியாவின் முடிவையும் நிராகரித்ததைத் தொடர்ந்து, இந்தியத் தரப்பிலிருந்து இந்த அறிக்கை வந்துள்ளது. வாஷிங்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு உரிமையுள்ள நீரை அதனிடமிருந்து பறிக்கும் எந்தவொரு முயற்சியும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தார் கூறினார்.
1960-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து, தற்போது அது தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இஷாக் தார் கூறுகையில், “லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் நீர் வளங்கள் மிகவும் இன்றியமையாதவை என்பதையும், அரசியல் உறவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் அவை பலியாகிவிடக் கூடாது என்பதையும் இரு நாடுகளும் புரிந்துகொண்டதால்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்று, அந்தக் கொள்கை ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.”
மேலும், பாகிஸ்தான் துணைப் பிரதமர், காலநிலை மாற்றத்தால் ஒத்துழைப்பு “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக” மாறியுள்ளது என்று கூறி, உரையாடல், வெளிப்படையான தரவுப் பகிர்வு மற்றும் அதிகரித்த தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு ஆதரவளித்தார். “எனவே, பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நீர் பாதுகாப்பை பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் இறுதியாக, தேசியப் பாதுகாப்பிலிருந்து பிரிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
