Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேட்டைத் தடுக்கவும், விற்பனை நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் தமிழக அரசு புதிய ஆன்லைன் முன்பதிவு (Digital Booking) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், மதுபானங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. (MRP) விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் எழுந்து வந்தன. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும், தகராறுகளும் ஏற்பட்டன.

Republic Tamil

இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளத்தில் மதுபானங்களின் உண்மையான விலை தெளிவாகக் காண்பிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே செலுத்த முடியும். இதன் மூலம் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறை முழுமையாகத் தடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது இடைநீக்கம், பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  சேலத்தில் அதிரடி! 170 டாஸ்மாக் கடைகள் ஷட் டவுன் – காலி பாட்டில் விவகாரத்தில் வெடித்த போராட்டம்

இந்த புதிய வசதிக்காக TASMAC E2E என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபான பிராண்டுகள் இருப்பில் உள்ளன, அவற்றின் விலை என்ன என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

அதன்பிறகு, தேவையான மதுபானத்தைத் தேர்வு செய்து, அதை கார்ட்டில் சேர்த்து, மொபைல் எண்ணைப் பதிவு செய்து OTP மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும். பின்னர் UPI, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பணம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தப்பட்டதும், வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு ஒரு QR குறியீடு (QR Code) அனுப்பப்படும். அந்த QR குறியீட்டை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்தால், ஊழியர்கள் அதைச் சரிபார்த்து, முன்பதிவு செய்யப்பட்ட மதுபானத்தை உடனடியாக வழங்குவார்கள்.

Republic Tamil

இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேசமயம், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பில் வழங்காமல் ஏமாற்றுவது போன்ற முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  அதிர்ச்சி திருப்பம்! தவெக எம்.எல்.ஏ கபில் மீது பாய்ந்தது வழக்கு! சோளிங்கர் சம்பவத்தில் 21 நாட்களுக்குப் பின் போலீஸ் அதிரடி!

ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட மதுபானத்தை அதே நாளில் பெற்றுக்கொள்ளத் தவறினால், செலுத்திய தொகையில் ரூ.10 சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் திருப்பி அனுப்பப்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம் தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, சுமார் 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்களை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், வயது வரம்பு தொடர்பான விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள், POS இயந்திரங்கள் உள்ளிட்டவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கடைகள் மீது சட்டப்படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  "ரூ.3,600 கோடி டாஸ்மாக் டீலிங்… விடிந்ததும் பாய்ந்த புதிய FIR: செந்தில் பாலாஜி கோட்டையைச் சரிக்கும் DVAC புயல்!"

இந்த புதிய நடைமுறை குறித்து அமைச்சர் விளக்கம் அளிக்கையில், “இந்தத் திட்டத்தின் மூலம் மதுபானங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படாது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி முன்பதிவு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று தாங்களே மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது வீட்டு விநியோகத் திட்டம் அல்ல; ஆன்லைன் கட்டணம் செலுத்தி கடையில் பெற்றுக்கொள்ளும் வசதி மட்டுமே” என்று தெளிவுபடுத்தினார்.

Republic Tamil

மேலும், இந்த இணையதள சேவை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் தமிழ்நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக எழுந்து வந்த கூடுதல் கட்டண புகார்களுக்கு தீர்வு காணவும், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் டிஜிட்டல் சேவையை வழங்கவும் இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு திட்டம் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago