தடயமே…. இல்லை ….
இந்த ஒற்றை வரிதான் இன்று தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இது வெறும் காவல்துறை அறிக்கையின் வரி அல்ல… இரண்டு ஏழைத் தாய்களின் கருவறையையே கிழித்தெறியும் ஓலம். ஒரு குழந்தை அழுதாலே தெருவே திரும்பிப் பார்க்கும். அப்படியிருக்க, உறக்கத்தில் இருந்த இரண்டு பிஞ்சுகள் சத்தமே இல்லாமல் காற்றில் கரைந்தது எப்படி? பூமி பிளந்து விழுங்கியதா… இல்லை மனித மிருகங்கள் தூக்கிச் சென்றனவா? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் ‘ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான’ தமிழகக் காவல்துறை தலைகுனிந்து நிற்பதுதான் கசப்பான நிஜம்.
ராணிப்பேட்டை: சாலையோரம் உறங்கிய ஒரு வயது மகேஸ்வரி!
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாப்பேட்டை கிராமம், பிள்ளையார் கோவில் தெரு. அங்கு வசிப்பவர் சேகர். காலி குடிநீர் பாட்டில்களைப் பொறுக்கி, காயலான் கடையில் போட்டு… அதில் கிடைக்கும் சொற்ப காசில் குடும்பத்தை நகர்த்தும் ஏழைத் தொழிலாளி. அவருக்குச் சொந்த வீடு இல்லை… வாடகை வீடும் இல்லை… சாலையோரம்தான் வீடு, வானம்தான் கூரை.

கடந்த மாதம் 24-ம் தேதி இரவு. வழக்கம்போல மனைவியுடனும், ஒரு வயதே நிரம்பிய மகள் மகேஸ்வரியுடனும் சாலையோரத்தில் படுத்து உறங்கியிருக்கிறார் சேகர். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த தாய் பார்க்கிறாள்… அருகில் குழந்தை இல்லை! தொட்டில் இல்லாத பிஞ்சு… தாய்மடிதான் தொட்டில். அந்த மடியிலிருந்தே மாயமாகியிருக்கிறாள் மகேஸ்வரி.
“ஐயோ… என் புள்ளையக் காணோம்!” என்ற தாயின் அலறல் அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்தது. அக்கம்பக்கம் தேடி… ஊரே திரண்டு தேடி… இறுதியில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், 25 நாட்களைக் கடந்தும் ஒரு துப்பும் இல்லை.
சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லை, தடயம் இல்லை, சாட்சி இல்லை என்று கைவிரித்த காவல்துறை, இப்போது அந்த நேரத்தில் பதிவான செல்போன் டவர் அழைப்புகளை வைத்து சந்தேக நபர்களைத் தேடுவதாகச் சொல்கிறது. ஒரு வயதுக் குழந்தையை யாரோ திட்டமிட்டுத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பது பெற்றோரின் கதறல். “எங்க பிள்ளையை மீட்டுக் கொடுங்க சாமி…” என்ற அந்த ஏழைத் தந்தையின் குரல் அந்த மண்ணையே உலுக்குகிறது. ஆனால், அதிகார வர்க்கத்தின் காதுகளுக்கு அது எட்டவில்லையா?

செஞ்சி அதிர்ச்சி: 10 நாட்களாகியும் துப்பு இல்லை!
ராணிப்பேட்டை சோகம் ஒருபுறம் என்றால், மறுபுறம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
கடந்த 11-ம் தேதி அதிகாலை 5 மணி. கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் மாயமானாள். வீட்டின் கதவு திறந்திருந்தது… குழந்தை இல்லை!
10 தனிப்படைகள் அமைத்தும், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும், ட்ரோன் பறக்கவிடப்பட்டும்… 10-வது நாளாகியும் சிறு துப்புக்கூட இல்லை. தூங்கிய குழந்தை நடந்து சென்றிருக்க முடியாது… அழுதிருந்தால் அம்மா எழுந்திருப்பாள்… அப்படியானால் மயக்க மருந்து கொடுத்துத் தூக்கிச் சென்றார்களா? என்ற அச்சம் கிராம மக்களை உறைய வைத்துள்ளது.
“ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை திணறுகிறதா? இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ வசம் ஒப்படையுங்கள்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாகக் கேட்டிருப்பது, அரசின் மீதான நம்பிக்கையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் அரசையும் காவல்துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். போராட்ட அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், செஞ்சி சிறுமி மாய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார். இது அரசின் விழிப்புணர்வா… இல்லை அரசியல் அழுத்தத்திற்குப் பணிந்த நடவடிக்கையா?
இது தற்செயலா… தொடர் கைவரிசையா?
அடுத்தடுத்து இதே பாணியில் குழந்தைகள் மாயமாவது தற்செயலா, இல்லை குழந்தை கடத்தல் கும்பலின் தொடர் கைவரிசையா என்ற அச்சம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது. தத்துவமாகப் பார்த்தால்… ஒரு சமூகத்தின் ஆன்மா அதன் குழந்தைகளின் பாதுகாப்பில்தான் அடங்கியிருக்கிறது. பிஞ்சுகளைக் காக்க முடியாத அரசு, எதைக் காத்து என்ன பயன்?

அதிகார வர்க்கத்திடம் நாம் கேட்கும் கேள்விகள் இவை…
1. தூங்கிய ஒரு வயது குழந்தை சத்தமே இல்லாமல் மாயமானது எப்படி? அந்த இரவில் ரோந்துப் பணி எங்கே போனது?
2. செஞ்சியில் 10 தனிப்படைகள் போட்டும் 10 நாட்களாக ஒரு துப்புக்கூட இல்லை என்றால், விசாரணை எந்தத் திசையில் போகிறது?
3. சம்பவப் பகுதி சிசிடிவி கேமராக்கள் என்ன சொல்கின்றன? இதுவரை ஒரு சந்தேக நபரின் புகைப்படம்கூட வெளியிடப்படவில்லையே ஏன்?
4. குழந்தைகள் மாய வழக்குகளில் தமிழக போலீஸின் தாமதத்தை உச்சநீதிமன்றமே கண்டித்த பிறகும், பொதுவான SOP எங்கே?
5. தெரிந்தவர்கள் கைவரிசையா, குடும்பத் தகராறு பின்னணியா, கடத்தல் கும்பலா… எந்தக் கோணத்தில் உறுதியான முன்னேற்றம்?
ஏழைகளின் குழந்தை என்பதால் அலட்சியமா? பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்திருந்தால் இத்தனை நாள் பொறுத்திருப்பார்களா? உண்மையை மூடி மறைப்பதில் அதிகாரிகளின் அச்சம் எதில்?
பிஞ்சுகள் மாயமாவதும், தகவல் கேட்டு சுவரொட்டி ஒட்டுவதும் மட்டுமே வழக்கமாகிவிடக் கூடாது. பதில் சொல்ல வேண்டிய நேரமிது!
