Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Jolarpettai

ஒருபக்கம் குடிநீருக்காக காலி குடங்களோடு தெருத்தெருவாய் அலையும் தாய்மார்கள்… மறுபக்கம் நாளொன்றுக்கு 2,000 லிட்டர் சுத்தமான காவிரி குடிநீர் வீதியில் கலந்து வீணாவதை வேடிக்கை பார்க்கும் அதிகார வர்க்கம். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்துக்கு இதைவிட சாட்சி வேறு என்ன வேண்டும்?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை புதுர் சுண்ணாம்புகாளை மேம்பாலம் அருகே… கடந்த மூன்று மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவரப்படும் காவிரி நீர், இங்கே வீதியில் நாசமாகிக் கொண்டிருக்கிறது.

கணக்கு போட்டால் கண்ணீர் வரும்! நாளொன்றுக்கு சராசரியாக 2,000 லிட்டர் வீதம், 91 நாட்களுக்கு வைத்துக் கொண்டால் 

2,000 X 91 = 1,82,000 லிட்டர்? ஒரு லட்சத்து 82 ஆயிரம் லிட்டர்… யோசித்துப் பாருங்கள். ஒரு குடும்பத்துக்கு நாளொன்றுக்கு 50 லிட்டர் என்று வைத்துக்கொண்டாலும், 3,640 குடும்பங்களின் ஒருநாள் தாகத்தைத் தீர்த்திருக்கலாம். 10 கிராமங்களின் மக்கள் ஒரு மாதம் குடித்திருக்கலாம். ஆனால், இந்த அதிகாரிகளின் கண்களுக்கு இது வெறும் ‘தண்ணீர்’… மக்களின் உயிர் அல்ல!

இதையும் படியுங்க  "What is surprising to me is how swift the backlash is

புகார் கொடுத்து புண்ணியமில்லை… கெஞ்சியும் மனம் இரங்கவில்லை!

உடைப்பைக் கண்ட அப்பகுதி மக்கள், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடந்திருக்கிறார்கள். “ஐயா… தண்ணி வீணாகுதுய்யா… சரிபண்ணுங்கய்யா” என்று கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்கள். மனு கொடுத்திருக்கிறார்கள். போனில் அழுதிருக்கிறார்கள். ஆனால், ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் காதுகளில் இது விழவே இல்லை.

காரணத்தைக் கேட்டால் ரத்தம் கொதிக்கிறது! இந்த பைப் லைன் யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறது என்பதில் மூன்று அதிகாரிகளுக்கு இடையே ‘ஈகோ’ யுத்தம் நடந்திருக்கிறது.

1. காவிரி கூட்டு குடிநீர் திட்ட கண்காணிப்பாளர் 2. ஜோலார்பேட்டை நகராட்சி பொறியாளர் 3. திருப்பத்தூர் – ஆம்பூர் கூட்டுக்குடிநீர் வழங்கல் அதிகாரி 

“இது என் டிபார்ட்மெண்ட் இல்லை… அது உன் டிபார்ட்மெண்ட்” என்று பந்தை ஒருவருக்கொருவர் எட்டி உதைத்து மூன்று மாதங்களாக கபடி ஆடியிருக்கிறார்கள் இந்த மூவர் கூட்டணி. 

மக்களின் தாகம் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பைல்களில் மூழ்கிக் கிடக்கும் இவர்களின் அலட்சியத்துக்கு விலையாக 1.82 லட்சம் லிட்டர் நீர் மண்ணோடு மண்ணாகியிருக்கிறது.

இதையும் படியுங்க  Keeping the bag open and outside could make this course of

சம்பளம் வாங்க மட்டும் இவர்கள் அரசு ஊழியர்கள்… வேலை செய்யச் சொன்னால், ‘அது என் வேலை இல்லை’ என்பார்கள். இவர்களைப் போன்றவர்களை இனியும் அந்த நாற்காலியில் அமரவைத்திருப்பது மக்கள் வரிப்பணத்துக்கு செய்யும் துரோகம் இல்லையா?

7 மணி நேர தேடுதல்… வெறும் கண்துடைப்பு நாடகம்!

பொதுமக்களின் தொடர் அழுத்தம், பத்திரிகையாளர்களின் கேள்வி என்று நெருக்கடி முற்றியதால், வேறு வழியின்றி இன்று மூன்று அதிகாரிகளும் ‘ஸ்பாட் விசிட்’ அடித்து. சுமார் 7 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி, கடைசியில் “ஆமாம்… இது காவிரி கூட்டு குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வரும் பைப் லைன்தான்… சேதமடைந்திருக்கிறது” என்று ‘கண்டுபிடித்து’ விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மூன்று மாதங்களாக வீணாகும் தண்ணீர் யாருடையது என்று கண்டுபிடிக்க இவர்களுக்கு 7 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது! இந்த லட்சணத்தில் இவர்கள் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்!

கண்டுபிடித்துவிட்டார்கள் சரி… சரிசெய்துவிட்டார்களா என்றால்… இல்லை! வழக்கம்போல் தண்ணீர் இன்றும் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது.

“இனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், தண்ணீர் வடிய வேண்டும், மாற்று பைப் கொண்டு வர வேண்டும், ஜாயிண்ட் செய்ய வேண்டும்… அதன் பிறகுதான் சப்ளை சீராகும்” என்று அதிகாரி தரப்பில் சாவகாசமாக சொல்லப்படுகிறதாம். 

இதையும் படியுங்க  Each buy from this wholesaler comes with a assure

இதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமோ என்று தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர் அப்பகுதி மக்கள்.

ஒரு குழாயை அடைக்க மூன்று மாதம்… நிதி ஒதுக்க இன்னும் மூன்று மாதமா? இந்த வேகத்தில் இவர்கள் வேலை செய்தால், ஜோலார்பேட்டை மக்கள் தாகத்திலேயே மடிந்துவிடுவார்கள் போல 

மூன்று மாதங்களாக வீணான 1,82,000 லிட்டர் தண்ணீருக்கு யார் பொறுப்பு? ஈகோ பார்த்து பந்தாடிய அந்த மூன்று அதிகாரிகளின் சம்பளத்தில் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தயாரா?

குடிநீரை வீணடிப்பது குற்றமில்லையா? சாமானியன் ஒரு குடம் தண்ணீரை வீணடித்தால் அறிவுரை சொல்லும் அரசு, லட்சக்கணக்கான லிட்டரை வீணடித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இனியும் எத்தனை லட்சம் லிட்டர் வீணான பிறகு இந்த அரசு எந்திரம் விழித்துக்கொள்ளும்? பதில் சொல்லுவாரா கலெக்டர் ஆபிசர் .?

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago