Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Senji

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமம். அந்த குக்கிராமத்தில் அக்டோபர் 11-ம் தேதி இரவு ஒரு வீட்டில் சிரிப்புச் சத்தம். வடிவேல் – பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமாவதிக்கு (7) பிறந்தநாள். இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்தச் சுட்டிப் பெண், புத்தாடை அணிந்து கேக் வெட்டி, உறவினர்களோடு கொண்டாடிவிட்டு, அம்மா அப்பாவுக்கு நடுவில் படுத்து உறங்கினாள்.

மறுநாள் அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை 5.30 மணி. விடிந்தது… ஆனால் வீடே அலறியது! பெற்றோருக்கு நடுவில் படுத்திருந்த ஹேமாவதியைக் காணவில்லை. வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டு கதவுகளில் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்தது. தூக்கக் கலக்கத்தில் எழுந்த தாய் பவானியின் அலறல் அந்த கிராமத்தையே உலுக்கியது.

“என் பொண்ணு எங்க… என் பொண்ணு எங்க?” – தாயின் கதறல், தெருவெங்கும் எதிரொலித்தது.

களத்தில் இறங்கிய காக்கிப் படை! தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் எஸ்.பி. மதிவாணன் நேரடியாக நடுக்குப்பம் கிராமத்துக்கு விரைந்தார். ஆரம்பத்தில் 5 தனிப்படை, பிறகு 10 தனிப்படை… மொத்தம் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் களத்தில்!

இதையும் படியுங்க  Each buy from this wholesaler comes with a assure

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறுமியின் வீட்டிலிருந்து பல திசைகளில் ஓடி குழப்பியது. கைரேகை நிபுணர்கள் வீடு முழுக்க சல்லடை போட்டனர். ஊரைச் சுற்றியுள்ள ஏரி, குளம், தாமரை இலை மண்டிக் கிடக்கும் குட்டைகளில் தீயணைப்பு வீரர்கள் இறங்கித் தேடினர். மலைப்பகுதி, விவசாய நிலம், ஒதுக்குப்புறம் என ஒரு இன்ச் விடவில்லை.

அந்தப் பகுதியில் உள்ள 3 செல்போன் டவர்களில் பதிவான சுமார் 600 அழைப்புகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக அலசப்பட்டன. விழுப்புரம், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களுக்கு விசாரணை விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், 5 நாட்கள் ஆகியும்… ஒரு துப்பும் இல்லை! தாயிடம் திரும்பிய விசாரணை… திணறும் போலீஸ்!

இந்த வழக்கில் போலீஸாருக்கு முதல் நெருடல் தாய் பவானியின் வாக்குமூலத்தில்தான் ஆரம்பித்தது. “இரவு எங்களுடன் தூங்கினாள், அதிகாலையில் காணவில்லை, ஒரு கதவு திறந்திருந்தது” – இதைத் தவிர அவரிடம் வேறு தகவல் இல்லை. 7 வயது சிறுமி தானாக எழுந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை, அழுகுரல் கேட்காமல் தூக்கிச் செல்லப்பட்டாளா?

பிறந்தநாளுக்கு வந்த உறவினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர், சென்னையில் இருக்கும் சிறுமியின் அக்கா வரை விசாரணை வளையம் விரிந்தது.

இதையும் படியுங்க  We’re massive fans of the Soraya 2 Rabbit

செஞ்சி உட்கோட்டத்தில் போக்சோ வழக்கில் சிக்கியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் தற்போதைய இருப்பிடம் சோதனையிடப்பட்டது. சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை. கிராமத்தில் யாராவது தலைமறைவாகியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை.

“நடுக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதா?” – என்ற சந்தேகத்தில் மோப்ப நாய் உதவியுடன் மண் திட்டுகள் தோண்டிப் பார்க்கப்பட்டன.

எஸ்.பி. மதிவாணன் சொல்கிறார்: “தவறான கண்ணோட்டம் உள்ள உள்ளூர் நபர்கள் பட்டியல் தயாரித்துள்ளோம். எந்தக் கோணத்தையும் விடவில்லை.”

திருப்பம்… போனை ஆஃப் செய்த சாமியார்! இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக வந்திருப்பது ‘சாமியார்’ ஆங்கிள்!

சிறுமியின் குடும்பத்துக்கு அறிமுகமான ஒரு சாமியாரிடம் போலீஸார் விசாரிக்க முயன்றபோது, அவர் தனது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. பிறந்தநாள் நிகழ்வுக்கு முன்பு அந்த சாமியார் வீட்டுக்கு வந்து சென்றாரா? சிறுமிக்கு ‘பரிகாரம்’, ‘தோஷம்’ என்ற பெயரில் ஏதாவது நடந்ததா? அல்லது மூடநம்பிக்கையின் பெயரில் குழந்தை கடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீஸார் அதிர்ச்சியுடன் விசாரணையைத் திருப்பியுள்ளனர்.

இதையும் படியுங்க   ”6 வயதில் அப்பா போட்ட மேக்கப் முதல் இளையராஜா ரகசியம் வரை ஓப்பனாக பேசிய அதிதி ஷங்கர்!

போன் ஆஃப் செய்யப்பட்டதால், அவரது கடைசி லொகேஷன், அழைப்பு விவரங்களை வைத்து தனிப்படை தேடி வருகிறது. சாமியார் தலைமறைவானது தற்செயலா, திட்டமிட்ட தப்பித்தலா என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.

ஊர் முழுக்க பதற்றம்… ரூ.2 லட்சம் சன்மானம்! சிறுமியைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குண.சரவணன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். ஊர் மக்கள் இரவு பகலாக தேடுகின்றனர். பெற்றோர் கதறி அழுதபடி காவல் நிலைய வாசலில் காத்திருக்கின்றனர்.

வீட்டைத் திறந்து வச்சி உறக்கம்… அதிகாலையில் மாயமான 7 வயது பூ… தாயிடம் விசாரித்தால் கிளைமேக்ஸ்… சாமியாரின் ஸ்விட்ச் ஆஃப்… என ஒவ்வொரு முடிச்சும் இறுகிக் கொண்டே போகிறது.

ஹேமாவதி எங்கே? அந்த அதிகாலை 5.30 மணிக்கு அந்த வீட்டில் நடந்தது என்ன? போலீஸாரின் 600 செல்போன் அழைப்பு ஆய்வு சாமியாரை நோக்கி கை காட்டுமா? அல்லது வேறு ஒரு கொடூரனின் முகத்திரை கிழியுமா?

பதில் தெரியாமல் ஒரு மாவட்டமே மூச்சைப் பிடித்துக் காத்திருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago