லாவோஸ் நாட்டில் தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
லாவோஸ் நாட்டின் ஜால்சோ பவுன் மாகாணத்தில் உள்ள ஒரு குகைக்குள், தங்கம் தேடி ஏழு பேர் கடந்த வாரம் சென்றுள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தப் பகுதியில் பெய்த கனமழையால், குகையின் வெளியேறும் பாதை நீரால் அடைக்கப்பட்டது.
இதனால் குகைக்குள் சென்றவர்கள் வெளியே வர முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் உதவி கோரி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் கவனத்தை பெற்றது.
இதையடுத்து லாவோஸ் நாட்டு மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தாய்லாந்து மீட்பு படையினரின் உதவியுடன் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக 2018ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ஒரு குகையில் 12 பள்ளி மாணவர்கள் சிக்கியபோது, அவர்களை பாதுகாப்பாக மீட்பதில் இந்த மீட்பு குழு முக்கிய பங்கு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, குகைக்குள் சிக்கியிருந்த ஏழு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
