அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பில் ஈரான் தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்புக்குப் பிறகும், எந்தவொரு ஒப்பந்தம், போர்நிறுத்தம் குறித்தும் இறுதி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் நலன்களுக்கு உகந்ததாகவும், அவர் கூறிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே டிரம்ப் முன்னெடுப்பார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த விலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
சந்திப்புக்கு முன்பு, ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டுள்ள கடல் கண்ணிவெடிகளை ஈரான் அகற்றும் என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ளும் என்றும், கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார். ஆனாலும், இந்த நேரத்தில் ஈரானுக்கு எந்தப் பணமும் கொடுக்கப்படாது என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார். பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன், பறிமுதல் செய்யப்பட்ட 12 பில்லியன் டாலர் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என ஈரான் கோரி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் செய்திகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதே ஈரானின் முதன்மையான முன்னுரிமை. யுரேனியம் செறிவூட்டல், அணுசக்தி திட்டம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து தற்போது எந்த இறுதி விவாதங்களும் நடைபெறவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி குறித்து, ஈரானும் ஓமானும் மட்டுமே அதன் எதிர்காலத்தை முடிவு செய்யும்.
ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் மூலம் அல்ல, பலவந்தத்தின் மூலமே ஈரான் சலுகைகளைப் பெறுகிறது. அமெரிக்காவின் வாக்குறுதிகளை ஈரான் நம்பவில்லை என்றும், அமெரிக்கா முதலில் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல முக்கிய விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி, தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, ஈரான் 60% வரை செறிவூட்டப்பட்ட 440.9 கிலோகிராம் யுரேனியத்தைக் கொண்டுள்ளது. இது ஆயுதத் தரத்திற்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படுகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து, அங்கு பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. மறுபுறம், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தனது சுமார் 24 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் திருப்பித் தரப்பட வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா பின்வாங்காது என்பதற்கான உத்தரவாதங்களையும் அது கோருகிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, ஆனால் இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை.
