Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Sullan

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் பிரபல ரவுடி ‘சுள்ளான்’ மதன் (29), மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காணச் சென்றபோது இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியைச் சேர்ந்த மதன் மீது இரட்டைக் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொல்லங்குடியில் நடைபெற்ற சகோதரர்கள் கொலை வழக்கு, மேலூரில் நடைபெற்ற கொலை வழக்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது சுமார் 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மேலமங்கலம் கிராமத்தில் இன்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண்பதற்காக மதன் தனது நண்பருடன் சென்றுள்ளார். அவர் அங்கு வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த மர்ம நபர்கள், அவரைப் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக அருகிலுள்ள வயல்வெளிக்குச் சென்றபோது, அங்கு வந்த மர்மக் கும்பல் மதனை வழிமறித்துத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதையும் படியுங்க  "TVK நிர்வாகிகள் மீது கஞ்சா குற்றச்சாட்டு… தட்டிக் கேட்டவருக்கு கொடூர முடிவு!"

மர்ம நபர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மதன் அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் ஓடியுள்ளார். இருப்பினும், அந்தக் கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த சிவகங்கை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கரும்புத் தோட்டத்திலிருந்து மதனின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மோப்ப நாயின் உதவியுடனும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான காரணம் முன்பகையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட மதன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் வெளியிட்ட ரீல்ஸ் காணொளிகள் மற்றும் பதிவுகள் காரணமாக யாருடனாவது பகை அல்லது மோதல் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதன் மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வருவதை எதிர்தரப்பினர் முன்கூட்டியே கண்காணித்துத் திட்டமிட்டுக் கொலை செய்தார்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  மருத்துவத்துறைக்கே களங்கம்..! கிரிமினல்களுடன் சிண்டிகேட்..! சிவகங்கையை உலுக்கும் டாக்டர் மார்கண்டன்..!

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த மதனின் உறவினர்கள் அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க சிவகங்கை நகர் மற்றும் மேலமங்கலம் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ரவுடிகள் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது சுள்ளான் மதனும் படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 minutes ago at 26 minutes ago