தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, கட்சியில் மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததுடன், தனிப்பட்ட உரையாடல்களை பயன்படுத்தி மிரட்டியதாக ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பவ்யாலட்சுமி என்ற பெண் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பவ்யாலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அவரது புகாரில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவரது புகாரின்படி, சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி மூலம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகனை தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் கட்சி சார்ந்த பணிகள் குறித்து நடைபெற்ற உரையாடல், பின்னர் தனிப்பட்ட உரையாடலாக மாறியதாகவும், தொடர்ந்து வீடியோ அழைப்புகள் மூலமாகவும் பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது, தமக்குத் தெரியாமல் வீடியோ அழைப்புகளின் திரைப்பிடிப்புகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை சேமித்து வைத்ததாகவும், பின்னர் கட்சியில் மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கு அந்தப் பதவி தேவையில்லை என்றும், கட்சிப் பணிகளில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும் தெரிவித்த பிறகும், தன்னிடம் நடைபெற்ற உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்டுகள் மற்றும் வீடியோ அழைப்புகளின் காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டி, தொடர்ந்து பிளாக்மெயில் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகத்திற்குச் சென்று நடந்த சம்பவங்கள் குறித்து மூத்த நிர்வாகிகளிடம் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணையின்போது, முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த விஜய் மோகன், பின்னர் சில நாட்கள் தன்னுடன் பேசியதை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் வீடியோ தொடர்பான குற்றச்சாட்டை மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது செல்போனை முழுமையாக ஒப்படைத்து ஆய்வுக்கு வழங்கவில்லை என்றும், விசாரணையின்போது தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டு, கை ஓங்கி தாக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர், கட்சி நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து தன்னை அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தனது புகாரில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை மட்டுமல்லாமல் இதேபோன்று வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் வெளியில் வரத் தயங்குவதாகவும், இனி எந்தப் பெண்ணும் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே தாம் வெளிப்படையாக புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னிடம் இன்ஸ்டாகிராம் வழியாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள், வீடியோ அழைப்புகளுக்கான பதிவுகள் மற்றும் திரைப்பிடிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் பல்வேறு செல்பேசி எண்களை பயன்படுத்தி தொடர்பில் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் அனைத்து தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
