பிரபல “யூடியூபர் சவுக்கு சங்கரின்” மகன் டியோ யாழிசை தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி என்ற நிலவுமொழியை சவுக்கு சங்கர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டியோ யாழிசை என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் நிலவுமொழி, பணிச்சுமை காரணமாக சென்னையில் வசித்து வந்த நிலையில், டியோ யாழிசை தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் மரக்காணம் அருகே உள்ள ஜே.எம்.ஜி. பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தாய் நிலவுமொழி அவ்வப்போது சொந்த ஊருக்குச் சென்று மகனைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீப காலமாக டியோ மன வேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சூழலில், இன்று (ஆகஸ்ட் 5) காலை அவர் வசித்த வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாத்தா செந்தாமரைக்கண்ணன் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்புக்கான துல்லியமான காரணம், இதில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் உள்ளனவா, தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் இருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமான இறுதி விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், டியோ யாழிசையின் உயிரிழப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் இரங்கல் பதிவுகள் வேகமாகப் பரவி வருகின்றன. அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் சில பதிவுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், அவற்றின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.
தனது தந்தை சவுக்கு சங்கர் கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் சட்டப் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் சிறைவாசம் போன்ற சூழ்நிலைகள் காரணமாக டியோ சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சவுக்கு சங்கரின் தாயாரும், டியோவின் பாட்டியுமான கமலா தேவி உடல்நலக் குறைவால் காலமானதும் அவருக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்தியதியதாக தெரியவருகிறது

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல்களின்படி, உயிரிழப்பதற்கு முன்பு அவர் எழுதியதாகக் கூறப்படும் பதிவில், “எல்லாரும் என்னை பயன்படுத்திக் கொண்டார்கள்; என் பாட்டி இனி என்னைப் பார்த்துக் கொள்வார்” என்று குறிப்பிட்டிருந்த பதிவு உண்மையில் அவரால் எழுதப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன்பே குடும்பத்தில் ஏற்பட்ட துயரங்களும், சமீபத்திய சூழ்நிலைகளும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கர் தற்போது பல்வேறு சட்ட நடைமுறைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மகனின் திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், சவுக்கு மீடியா நிறுவன ஊழியர்களையும், ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல், சமூக மற்றும் ஊடக வட்டாரங்களைச் சேர்ந்த பலரும் சவுக்கு சங்கரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை சமூக வலைதளங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
