Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையாக மேம்படுத்தும் பணிக்காக சுமார் ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுமார் ₹12 கோடி செலவில் வனவிலங்குகள் பாதுகாப்பாக ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு கடந்து செல்லும் வகையில் சிறப்பு மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இதே பகுதியில் உள்ள வண்ணாத்திக்கரடு மலையில் கல்குவாரி அமைக்க வருவாய்த் துறையும் கனிமவளத் துறையும் அனுமதி வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் வனவிலங்குகளை பாதுகாக்க அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேம்பாலம் அமைத்து வரும் நிலையில், மறுபுறம் அதே வனவிலங்குகள் வாழும் பகுதியில் தினந்தோறும் வெடி வைத்து கற்கள் உடைக்கப்படுவதால், அவை அச்சமடைந்து அலறியபடி ஓடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மலை வெட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கற்கள் எங்கு சென்றன, யாருக்கு விற்கப்பட்டன, அதன் மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்ற விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து தனிநபராக தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Republic Tamil

“சிறுமலையின் ஒரு பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதால், காட்டுயிர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவை பாதுகாப்பாக சாலையைக் கடந்து செல்லும் வகையில் இரு மலைகளையும் இணைக்கும் வனவிலங்கு மேம்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்து வருகிறது.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள வண்ணாத்திக்கரடு மலையை உடைத்து கல்குவாரி அமைக்க வருவாய்த் துறை அனுமதி வழங்கியுள்ளது. வருவாய்த் துறையின் இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், அப்பகுதி கிராம மக்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

இதையும் படியுங்க  தாகத்தில் பெண் மீது மோகம்..! முதல் வழக்கில் சிக்கிய இளைஞர்..! அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் சிறப்புப்படை..!

சாலையின் வலது புறத்தில் வண்ணாத்திக்கரடு மலை உள்ளது. இடது புறத்தில் வகுத்துமலை அமைந்துள்ளது. இந்த இரண்டு மலைகளும் முன்பு ஒரே தொடர்ச்சியான மலைத்தொடராக இருந்தன. தற்போது அவற்றுக்கு நடுவே பாறைகளை வெட்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காட்டுயிர்கள் இயல்பாக ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு இடம்பெயர்வதற்காக, தேசிய நெடுஞ்சாலைத் துறை வனவிலங்கு மேம்பாலத்தை அமைத்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வண்ணாத்திக்கரடு மலையில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு தினமும் வெடி வைத்து மலை உடைக்கப்படுகிறது.

Republic Tamil

இதில் உள்ள மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால், ஒரு புறம் விலங்குகள் சுதந்திரமாகச் செல்ல மேம்பாலம் அமைக்கப்படுகிறது; மறுபுறம் அவை வாழும் மலையே வெடிவைத்து அழிக்கப்படுகிறது. இடிக்கப்படும் வீட்டிற்கு கூரை கட்டுவது போன்ற நிலைதான் இது.

வகுத்துமலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வனவிலங்கு இனங்கள் வாழ்ந்து வருவதாக மாணவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சாலை அமைப்பதற்காக மலை வெட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட கற்கள் எத்தனை டன்? அவை யாருக்கு விற்கப்பட்டன? அரசுக்கு கிடைத்த வருவாய் என்ன? என்ற விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு மலைகளிலும் பெய்யும் மழைநீர் கீழே உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வழியாக பென்னிக்குயிக் கட்டிய தரைப்பாலம் மூலம் விவசாய நிலங்களுக்கு சென்றடைவது வழக்கம்.

ஒருகாலத்தில் இப்பகுதியில் சுமார் 35 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் இருந்தது. தற்போது அது சுருங்கி 15 ஏக்கராக மட்டுமே உள்ளது.

வருவாய்த் துறைக்குச் சொந்தமான வண்ணாத்திக்கரடு மலையின் உச்சிப்பகுதியில், சட்ட விதிகளுக்கு புறம்பாக சில அனுமதிகளை மட்டுமே பெற்று, மலைப்பாதுகாப்பு குழுமத்தின் சான்றிதழ் பெறாமல் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல்குவாரி நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  கலைஞரை அவமதிக்கும் நோக்கில் ஏஐ புகைப்படம்: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திமுக அதிரடி புகார்!

இந்த கல்குவாரிகளுக்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், இயற்கை ஓடையை மூடி சாலையாக மாற்றி அதன் வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் பென்னிக்குயிக் கட்டிய பழமையான பாலத்தின் வழியாகச் செல்வதால், அந்தப் பாலமும் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.

Republic Tamil

வண்ணாத்திக்கரடு மலையின் உச்சியில் இயங்கும் இரண்டு கல்குவாரிகளில் தினமும் வெடிவைத்து கற்கள் உடைக்கப்படுவதால், வனவிலங்குகள் அச்சத்தில் ஓடி ஒளிகின்றன. ஒருபுறம் அவற்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மறுபுறம் அவற்றின் வாழ்விடமே அழிக்கப்படுகிறது.

மேலும், அமைக்கப்பட்டுள்ள வனவிலங்கு மேம்பாலமும் முழு மலைப்பகுதியையும் இணைக்கும் அளவுக்கு அகலமாக அமைக்கப்படவில்லை. இதனால் விலங்குகள் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும், இதில் தரக்குறைவு மற்றும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

இரண்டு மலைகளையும் வெட்டி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக எந்தெந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டது என்ற தகவலை கேட்டாலும் அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கல்குவாரிகளை மூட வேண்டும், மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க வேண்டும், கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவன வசதி ஏற்படுத்த வேண்டும், காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை வட்டார வளர்ச்சி அலுவலரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க  "கடலையும் பார்க்கலாம்… மேகத்தையும் தொடலாம்! வான்வழியாக மெரினாவை ரசிக்க ரெடியாகுங்க மக்களே!

வகுத்துமலையில் ஒன்பது கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஐந்து மட்டுமே இயங்குகின்றன. மீதமுள்ள அனுமதிகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இரவு நேரங்களிலும் வெடிவைத்து கற்கள் உடைக்கப்படுகின்றன. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை.

Republic Tamil

கச்சகட்டி பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் சட்ட விதிகளை மீறி இயங்கி வருகின்றன. கனிமவளத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல், கொண்டையம்பட்டி கிராமத்தில் மாரநாடு புளூ மெட்டல்ஸ் நிறுவனம் விவசாய நிலங்களுக்கு நடுவே விதிமுறைகளை மீறி இயங்கி வருகிறது. இதனால் என்னால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளேன்.

தாசில்தார், ஆர்.டி.ஓ., மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் பணத்தின் செல்வாக்குக்கு அடிபணிவதால் இந்த ஆலை குறித்து யாரும் ஆய்வு செய்ய வருவதில்லை” என்று சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் வேதனையுடன் தெரிவித்தார்.

இதனிடையே, நான்குவழிச்சாலைப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மலைப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட கற்களின் கணக்கு, கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் சட்டபூர்வ நிலை, வனவிலங்குகளின் பாதுகாப்பு, மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.

மேலும், “ஒரு பிடி மண்ணைக்கூட கொள்ளையடிக்க விடமாட்டோம்” என்று உறுதியளித்த கனிமவளத் துறை அமைச்சர், இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago