இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த KMP Mutiara Sentosa 2 என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 225 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சோகச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படகில் 232 பயணிகள் மற்றும் 39 பணியாளர்கள் என மொத்தம் 271 பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து புறப்பட்ட இந்தப் படகு, தெற்கு சுலவேசியின் மகாசர் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் உள்ள மதுரா தீவுக்கு அருகே நடுக்கடலில் தீ விபத்துக்குள்ளானது.

படகின் மேல் தளத்தில் திடீரென தீப்பற்றி, சில நிமிடங்களிலேயே கரும்புகை முழுப் படகையும் சூழ்ந்தது. தீ வேகமாகப் பரவியதால், பல பயணிகள் உயிர் தப்பும் முயற்சியாக லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து கடலில் குதித்தனர்.
அருகில் பயணித்துக் கொண்டிருந்த ‘TB Hasnur 26’ மற்றும் ‘British Mentor’ உள்ளிட்ட தனியார் சரக்குக் கப்பல்கள் மற்றும் டக் படகுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடலில் தத்தளித்த பலரை மீட்டன.
விபத்துக்குள்ளான படகில் வணிகப் பொருட்கள், பெரிய சரக்கு டிரக்குகள், வாகனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், பெரிய மீட்புக் கப்பல்கள் படகை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறிய டக் படகுகள் மூலமாகவே பயணிகள் படிப்படியாக மீட்கப்பட்டனர்.
மேலும், பிரதான மீட்பு மையத்திலிருந்து சம்பவ இடம் மிகவும் தொலைவில் இருந்ததால், இந்தோனேசிய அரசின் அதிகாரப்பூர்வ மீட்புக் கப்பலான ‘SAR 249 Permadi’ சம்பவ இடத்தை அடைய சுமார் 6 மணி நேரம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள், படகில் தீப்பிடித்திருப்பதாக அதன் கேப்டன் கப்பல் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். ஆனால், அந்த தகவலை அளித்த சில நிமிடங்களிலேயே அவருடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், கரும்புகையால் சூழப்பட்ட படகின் மேல் தளத்தில் சிக்கியிருந்த பயணிகள், லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்தபடி படகின் முன்பகுதி மற்றும் கட்டுப்பாட்டு அறையில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைக்க போராடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பின்னர் தீ மேலும் வேகமாகப் பரவியதால், பலர் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்றனர்.

சுரபாயா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத் தலைவர் நானாங் சிகித் தெரிவித்ததாவது, ஜாவா கடலில் உள்ள சாபுடி தீவின் வடக்கே சுமார் 19 நாட்டிகல் மைல் தொலைவில் படகு முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக கூறினார்.
தற்போது வரை தீ விபத்துக்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், கடற்படை, தேசிய மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து காணாமல் போன 41 பேரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மேலும் ஒரு முக்கிய சிக்கலாக, பயணிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகுகளில் ஏற்றுவது வழக்கமாக இருப்பதால், உண்மையில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பதை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த தவறான பயணிகள் பட்டியலே தற்போதைய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளிலும் பெரும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், மக்கள் பெருமளவில் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆனால், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமை, அதிகப்படியான பயணிகளை ஏற்றுதல், பழைய மற்றும் காலாவதியான படகுகளை இயக்குதல் போன்ற காரணங்களால், இதுபோன்ற கடல் விபத்துகள் அந்நாட்டில் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன 41 பேரை உயிருடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், இந்த பயங்கர தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
