https://republictn.com/

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள “நூறு சாமி” திரைப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த “நூறு சாமி” (Nooru Saami) திரைப்படம், 2016-ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியை பெற்ற “பிச்சைக்காரன்” படத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இவர்கள் மீண்டும் இணையும் படமாகும்.

“பிச்சைக்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்று மிகவும் பிரபலமான “நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னப்போல ஆகுமா” என்ற பாடல் வரிகளிலிருந்து இந்தப் படத்திற்கு “நூறு சாமி” எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது “பிச்சைக்காரன்” திரைப்படத்தின் தொடர்ச்சி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்றிலும் புதிய, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட தாய்–மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

கிராமப்புற பின்னணியில் பெண்கள் மீது திணிக்கப்படும் சாதியக் கட்டுப்பாடுகள் மற்றும் சடங்குகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தீவிரமாக பேசும் கதையாக இப்படத்தின் டீசர் மூலம் படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஸ்வாசிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் திஷன் இந்த படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்” தயாரித்துள்ளது. இசையை பாலாஜி ஸ்ரீராம் அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான “மாயக் கனவோ” மற்றும் “அம்மா அம்மா” பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

முதலில் மே 1-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் (தெலுங்கு தலைப்பு: “வண்டா தேவுல்லு” – Vanda Devullu) ஒரே நேரத்தில் ஜூன் 19 அன்று உலகளவில் வெளியாகவுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago