எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) வீட்டில் பணிபுரிந்த இரண்டு பெண் ஊழியர்கள் மற்றும் அவர்களில் ஒருவரின் சிறுவனை சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைத்ததாக வெளியான புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள ரவி மோகனின் இல்லத்துக்கு நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற இரண்டு பெண்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீலாங்கரை காவல்துறையினர் உடனடியாக நடிகர் ரவி மோகனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டில் இருந்த சில பொருட்கள் திருடுபோயிருந்ததாகவும், அவற்றை மீட்பதற்காகவே சம்பந்தப்பட்ட பெண்களையும் சிறுவனையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தங்கவைத்திருந்ததாகவும் ரவி மோகன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வீட்டில் திருட்டு நடந்திருந்தாலும், ஊழியர்களை சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைக்கக் கூடாது என்றும், இதுகுறித்து முறையாக புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு இருந்த இரண்டு பெண்களையும் சிறுவனையும் காவல்துறையினர் மீட்டனர்.
