Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, தனுஷின் அரசியல் வருகை குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கும், அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை, தேசிய விருதுகள், தனது நடிப்பு அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான தனுஷ் ரசிகர் மன்றக் கொடி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது அரசியலுக்கான முன்னோட்டம் அல்ல என்று கஸ்தூரி ராஜா தெளிவுபடுத்தினார். அந்தக் கொடி தனுஷின் திருமணத்தின்போது தோரணமாக பயன்படுத்தப்பட்ட வடிவமைப்புதான் என்றும், கடந்த 18 ஆண்டுகளாக தனுஷ் நற்பணி மன்றங்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். தனுஷ் புதிய அரசியல் கட்சியையோ, புதிய கொடியையோ அறிமுகப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்; எனக்குத் தெரியாது” என்று மிகவும் நிதானமாகப் பதிலளித்தார். தேவையற்ற யூகங்களுக்கு இடமளிக்காமல், முடிவு முழுவதும் தனுஷின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதையே அவர் சுட்டிக்காட்டினார்.

தனுஷின் ஆரம்பகால சினிமா பயணத்தை நினைவுகூர்ந்த கஸ்தூரி ராஜா, முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பின்போது தனுஷுக்கு சினிமாவில் நடிக்கவே விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். “என்னை விட்டுவிடுங்கள் அப்பா… நான் போய்விடுகிறேன்” என்று அழுதபடியே கெஞ்சியதாகவும், முதல் ஐந்து அல்லது ஆறு படங்கள் வரை கூட சினிமா மீது அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை என்றும் கூறினார்.

இதையும் படியுங்க  முடிவுக்கு வந்த சென்சார் சர்ச்சை! 'A' சான்றிதழுடன் ஜூலை 24-ல் வெளியாகிறது முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்'!

ஆனால் அதன் பிறகு தனது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே தனுஷ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தனுஷுக்கு தான் கூறிய ஒரே ஒரு அறிவுரை பற்றியும் கஸ்தூரி ராஜா பேசினார். “இயக்குநரோ, தயாரிப்பாளரோ படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும், அவர்கள் கூறிய நேரத்திற்கு நீ அங்கு இருக்க வேண்டும்” என்று கூறியதாகவும், அந்த ஒழுக்கத்தை தனுஷ் இன்றுவரை தவறாமல் கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் ‘ராயன்’ படத்திற்காக சிறந்த இயக்குநராகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறப்பு பிரிவில் சிறந்த நடிகராகவும் தனுஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பேசிய அவர், “விருது கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால் தனுஷ் விருதுகளுக்காக ஏங்கும் மனிதர் அல்ல. இது அவரது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த இரட்டை தேசிய விருது முழுக் குடும்பத்திற்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "ரீல் அல்ல.. ரியல் ஹீரோக்கள்!"- நீட் அநீதிக்கு எதிராக வீதிக்கு வந்த திரைப்பிரபலங்கள்... !
Republic Tamil

தனது மூத்த மகன் செல்வராகவன் பற்றியும் அவர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த செல்வராகவன், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே “நான் சினிமாவுக்குத்தான் போகப் போகிறேன்” என்று கூறிவிட்டதாகவும், குடும்பத்தில் சினிமாவுக்கு விருப்பத்துடன் வந்த ஒரே நபர் செல்வராகவன்தான் என்றும் தெரிவித்தார்.

உண்மையில் தனது பிள்ளைகள் யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததாகவும், சிறுவயதில் திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சிகளுக்குக் கூட அவர்களை அழைத்துச் செல்லவில்லை என்றும் கூறினார்.

தனது நடிப்பு வாழ்க்கை குறித்து பேசிய கஸ்தூரி ராஜா, ‘ஹபீபி’ திரைப்படம் தனது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையை ஏற்படுத்தியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இதுவரை மக்கள் தன்னை இயக்குநராகவும், தனுஷ் மற்றும் செல்வராகவனின் தந்தையாகவும் மட்டுமே அறிந்திருந்த நிலையில், இந்தப் படம் தன்னை ஒரு நடிகராக மக்களிடம் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

“நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் என்னை கஸ்தூரி ராஜா என்று அழைப்பதில்லை; ‘யூசுப் பாய்’ என்றே அழைக்கிறார்கள். திரைப்படம் வெளியானதிலிருந்து கல்லூரிகள், பொதுக்கூட்டங்கள், பாராட்டு விழாக்கள் என தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. பலர் கைகளைப் பிடித்து கண்கலங்கிப் பாராட்டுகிறார்கள். ஒரு நடிகராக இப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” என்று அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்க  "படிப்பில் ரேங்க் ஹோல்டர்.. நடிப்பில் தனுஷ் சாய்ஸ்! வட சென்னையைக் கொண்டாடும் ரம்யா ரங்கநாதன்!"

மேலும், தற்போது பல புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், சசிகுமார் நடிக்கும் ஒரு திரைப்படத்திலும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்துவருவதாகவும் தெரிவித்தார். இனி ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும், ஆனால் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிற்கும் வலுவான பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

சினிமாவில் ஒரு நடிகரை உருவாக்குவதில் இயக்குநரின் பங்கு மிகப்பெரியது என்றும் கஸ்தூரி ராஜா வலியுறுத்தினார். ‘ஹபீபி’ திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதர்வன், கதாபாத்திரத்தை முழுமையாக தன்னுள் ஊற்றியதால்தான் அந்த அளவுக்கு நடிக்க முடிந்தது என்றும், அந்த வெற்றிக்கான பெருமை முழுவதும் இயக்குநருக்கே சேரும் என்றும் பாராட்டினார்.

“சினிமாதான் என் மூச்சு. சினிமாவைத் தவிர எனக்கு வேறு வாழ்க்கையே இல்லை. பணம் முக்கியம் தான். ஆனால் அதைவிட நல்ல கதாபாத்திரங்களும், நல்ல படங்களும் தான் எனக்கு முக்கியம். இயக்குநர்கள் நம்பிக்கை வைத்து அழைத்தால், என் முழு அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து நடிப்பேன்” என்று தனது சினிமா மீதான காதலை வெளிப்படுத்தினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago