கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை மாலை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அக்கா காணாமல் போனதை கவனித்த சிறுமியின் தம்பி, அதிர்ச்சியுடன் இதை பெற்றோரிடம் தெரிவித்தான்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அப்பகுதி முழுவதும் மகளை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் கண்ணீருடன் கூறுகையில், “காலை நேரத்தில் அக்கா அங்கே நின்றுக்கொண்டிருந்தார். பின்னர் வேலிக்கருகே நின்றதை பார்த்தேன். நான் விளையாடச் சென்று திரும்பி வந்தபோது அவர் இல்லை,” என்று தெரிவித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்ற காவல்துறையினர், அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். பின்னர், கொலை வழக்காக பதிவு செய்து, சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து பேசிய பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், “இந்தக் கொலையில் பலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “பகுதியில் உள்ள குளத்தில் இந்தச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பலர் உடந்தையாக இருக்கக்கூடும். இந்த சம்பவம் எங்கள் பேரூராட்சி மக்களை மிகுந்த துயரத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதனிடையே, “கடந்த 24 மணி நேரமாக எங்கள் மகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறிய காவல்துறையினர், திடீரென காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மகள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து கையெழுத்து பெற்றனர்,” என்று சிறுமியின் பெற்றோர் வேதனையுடன் குற்றஞ்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் துணைத் தலைவர் சதாசிவம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லாடி பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது, “குற்றவாளிகளை எந்தச் சூழலிலும் விடக்கூடாது” என்று உறவினர்கள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த காவல் துணைத் தலைவர் சதாசிவம், “குற்றவாளிகளை விடமாட்டோம். சிறிது அவகாசம் அளிக்கவும். அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்,” என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்களும் அப்பகுதி மக்களும், “குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்,” “உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோஷமிட்டபடி திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
“நீதி வேண்டும்”, “பச்சைப் பிள்ளைக்கு நீதி வேண்டும்” என்று முழக்கமிட்ட மக்கள், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிறுமி எதற்காகக் கொலை செய்யப்பட்டார், இதில் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதற்கான முழு விவரங்கள் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
மாயமான ஐந்தாம் வகுப்பு சிறுமி குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த சம்பவம், கோவை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
