திமுக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது மருமகன் முத்துக்குமார் ஆகியோர் மீது, ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 26 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக ஹோமியோபதி பெண் மருத்துவர் ஒருவர் சென்னை காவல் துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வினா விலாசினி (46) என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். வினா விலாசினி மற்றும் அவரது கணவர் நிர்மல் ஆகியோருடன், திருச்சி சிவாவின் மகள் காயத்ரி குடும்ப நண்பராகப் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, காயத்ரி மற்றும் அவரது கணவர் முத்துக்குமார் ஆகியோர் அவசரத் தேவைக்காக எனக் கூறி, மருத்துவர் வினா விலாசினியிடம் இருந்து 26 பவுன் தங்க நகைகள் மற்றும் பல தவணைகளாக ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பெற்ற பணம் மற்றும் நகைகளை நீண்ட நாட்களாக திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகவும், பலமுறை வற்புறுத்திக் கேட்டபோது, ஒரு பகுதி நகைகளை மட்டும் திருப்பி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மீதமுள்ள 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை வழங்காமல், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவர் வினா விலாசினி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
