உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா ஷர்மா. எம்பிஏ பட்டதாரியான இவர், ஒரு பிரபல நிறுவனத்தில் கண்டென்ட் கிரியேட்டராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ட்விஷா, தனது 19வது வயதில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று “மிஸ் புனே” பட்டத்தை வென்றார். மாடலிங் துறையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். தனது திரையுலக பயணத்தில் இரண்டு திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ட்விஷா, 2021ஆம் ஆண்டு வெளியான “முக்குரு மொனகல்லு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். 2012ஆம் ஆண்டு மிஸ் புனே பட்டம் வென்ற பிறகு பகுதி நேரமாக மாடலிங் செய்து வந்த அவர், விளம்பரப் படங்கள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தபோது தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நடிகையாக பணியாற்றினார்.
இவ்வாறு பிரபலமாக ஜொலித்து வந்த இவரது வாழ்க்கை, திடீரென துயரமான திருப்பத்தை சந்தித்து மர்ம மரணத்தில் முடிந்துள்ளது.
ட்விஷா ஷர்மா மற்றும் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் ஆகியோருக்கு, 2024ஆம் ஆண்டு ஒரு பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. டெல்லியில் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்த ட்விஷாவும், போபாலில் வழக்கறிஞராக இருந்த சமர்த் சிங்கும் அந்த தளம் வழியாக உரையாடத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் சாதாரண நட்பாக தொடங்கிய இவர்களது உறவு, நாளடைவில் காதலாக மாறியது. சமர்த் சிங் தன்னை படித்த, நாகரிகமான வழக்கறிஞர் என்றும், தனது தாய் மதிப்புமிக்க மாவட்ட நீதிபதி என்றும் ட்விஷாவிடம் கூறியுள்ளார். அவரது குடும்ப பின்னணி மற்றும் நன்னடத்தை மீது நம்பிக்கை கொண்ட ட்விஷா, தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்த இவர்கள், தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, இரு குடும்பங்களின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும், 2025ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு, ட்விஷா தனது கார்ப்பரேட் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்திருந்த கணவர் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ட்விஷா ஷர்மாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், தனது மகளை கணவர் குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக ட்விஷாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருமணமான முதல் சில நாட்கள் மட்டுமே ட்விஷாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவரது மாமியார் கிரிபாலா சிங் மற்றும் கணவர் சமர்த் சிங் ஆகியோர் தங்களது உண்மை முகத்தை காட்டத் தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ட்விஷாவின் பெயரில் இருந்த பியூட்டி பிஸினஸ் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலையான வைப்பு தொகையை அபகரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது சமூக ஊடக பணிகளுக்கு தடையாக இருந்ததுடன், அவர் கர்ப்பமானபோது அவரது நடத்தையை சந்தேகித்து கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு அழகான டேட்டிங் செயலி காதல் கதை, வெறும் ஐந்து மாதங்களில் கொடூரமான முடிவை சந்தித்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற நாளன்று, ட்விஷா தனது தாயாருக்கு தொலைபேசியில் அழைத்து கதறி அழுததாக கூறப்படுகிறது. தனது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து சித்திரவதை செய்து வருவதாகவும், இனி தன்னால் அதை தாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, கணவர் சமர்த் சிங் திடீரென அறைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த ட்விஷா, “அவர் வந்துவிட்டார்… பிறகு பேசுகிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து, நோய்டாவில் இருந்த ட்விஷாவின் பெற்றோர், அவரது கணவர் மற்றும் மாமியாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்ந்து அழைத்துள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை.
இந்த நிலையில், சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, கணவர் வீட்டார் ட்விஷாவின் பெற்றோருக்கு மீண்டும் அழைத்து, “ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளார்… அவருக்கு மூச்சு இல்லை” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
ட்விஷாவின் வீட்டிற்கு அருகிலேயே மருத்துவமனை இருந்தபோதிலும், நள்ளிரவு 11.30 மணிக்கு மேல், அதாவது சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாகவே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், வீட்டில் இருந்த ஆதாரங்களை அழிக்கவே தாமதம் செய்ததாக ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
