https://republictn.com/

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) மதிப்பெண் குளறுபடி விவகாரங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) அமைப்பினர் புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஜிட்டல் கிரியேட்டரான அபிஜீத் திப்கே தலைமையில், ஜூன் 6ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்த அமைதிவழிப் போராட்டம் நடைபெறும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நடைபெற்ற போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்தார்.

இதற்கிடையில், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி, டெல்லி காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். காவல்துறையினரின் குவிப்பால் அந்தப் பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக ஊடகங்களில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட நையாண்டி பக்கமாகவே கரப்பான்பூச்சி மக்கள் கட்சி உருவானது. பின்னர் அது “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது.

“கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் இறக்காது” (Cockroaches Never Die) என்ற கோஷத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

நீட் மற்றும் சிபிஎஸ்இ விவகாரங்களுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டம், சமூக வலைத்தளங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago