நவம்பர் மூன்றாம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்குற அரசு விழாவில் கலந்து கொண்டார் முதலமைச்சர் விஜய்.
இதற்காக சென்னையில் இருந்து கோவை ஏர்போர்ட் சென்று அங்கே இருந்து காரில் பெருந்துறைக்கு போனார். அரசு விழா முடிந்ததும் மதியம் பெருந்துறையில் இருந்து கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டார். அதற்கு முன் பெருந்துறையில் இருந்து கோவை வரைக்கும் இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சி.எம். விஜய் சர்ப்ரைஸ் விசிட் அடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் எல்லாரும் அலர்ட்டா இருங்க என அந்த ரூட்டில் இருக்கிற அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அலர்ட் மெசேஜ் போயிருக்கிறது.
ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் போவார் என தெரிந்தாலும் அது எந்த போலீஸ் ஸ்டேஷன் என்கிற விஷயம் பெரிய அதிகாரிகளுக்குக்கூட தெரியாமல்தான் இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் நவம்பர் மூன்றாம் தேதி மதியம் 3:15 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் சரகத்துக்குள் வருகிற கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலமைச்சர் விஜய் திடீரென சென்றார். அந்த போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் முதல்வர் விஜயை வரவேற்றார்.
இன்ஸ்பெக்டரை அவரோட நாற்காலியிலேயே உட்கார சொன்ன முதலமைச்சர் விஜய் அவருக்கு எதிரில் பக்கவாட்டில் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டார். இன்ஸ்பெக்டருக்கு எதிரில் கோவை மாவட்ட எஸ்.பி.பவன்குமார் ரெட்டியும், கோவை ஐஜி ரம்யா பாரதியும் உட்கார்ந்து இருந்தார்கள். இவர்களுக்கு கொஞ்சம் பின்னால் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் நின்று கொண்டு இருந்தார். அவருக்கும் கொஞ்சம் தள்ளி டிஎஸ்பி கரிக்கால் பாரிசங்கர் இருந்தார்.
இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணனிடம் முதலமைச்சர் விஜய் சில அதிரடியான கேள்விகளை கேட்டார். இந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் வரும் கிராமங்கள் எத்தனை இருக்கு? இங்க எந்த கேஸ் எல்லாம் அதிகமா வருது? என முதலமைச்சர் கேட்க, சார் இது ஹைவேஸ் அப்படிங்கறதுனால இந்த விபத்து கேசுகள் அதாவது ஆக்சிடன்ட்ஸ் கேஸ் மட்டும்தான் சார் அதிகமா வரும் என பதில் சொன்னார்.
அதன்பிறகு முதலமைச்சர் விஜய் இந்த ஸ்டேஷன் ஏரியாவுல என்ன விசேஷம் நடக்கும் எனக் கேட்க ”சார் இங்க இந்த அன்னை பசிலிக்கா சர்ச் ரொம்ப ஃபேமஸ்ங்க. வெளிநாடுகள்ல இருந்து எல்லாம் பக்தர்கள் வருவாங்க” என இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல, அப்ப கொஞ்சம் பக்கத்துல வந்த உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் முதலமைச்சர் விஜய் கிட்ட ;;சார் நீங்க போன மாசம் கோயம்புத்தூருக்கு வந்த அதே நாள்லதான் அந்த சர்ச்ல ஒரு லட்சம் பேரு திருவிழாவுக்கு வந்தாங்க. அதனாலதான் நாம ரூட்ட கூட மாத்துணோம்” என விளக்கம் கொடுக்கிறார்.
அதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் விஜய், இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி, ”ஆமா இந்த கஞ்ச புழக்கம் இருக்கா? நம்ம அதெல்லாம் ஆக்ஷன் எடுத்துட்டு இருக்கோமா? என அடுத்த கேள்வியை கேட்டார். இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், ”சார் இந்த பக்கம் நிறைய காலேஜங்கள் எல்லாம் இருக்கு சார். வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து படிக்கிறாங்க. அதனால இந்த கஞ்சா புழக்கம் இருக்கா? அப்படின்னு நம்ம அடிக்கடி சோதனை பண்ணிட்டுதான் இருக்கோம்.
கல்லூரி மாணவர்களோட இந்த ஹாஸ்டல் உள்ளிட்ட பல இடங்கள்ல அடிக்கடி நாங்க ரைடு போயிட்டுதான் இருக்கோம். இங்க அது ஃபுல்லாவே கண்ட்ரோல்ல தான் சார் வச்சிருக்கோம்” என பதில் சொன்னார். அதை கேட்ட முதலமைச்சர் விஜய் கோவை ஐஜி, எஸ்பி, இன்ஸ்பெக்டர் மூவரையும் பார்த்து ”இதெல்லாம் கண்ட்ரோல்ல இருக்குங்கறீங்க. ஆனா கோவை மாவட்டத்தில குறிப்பா இந்த ஏரியாவுல கஞ்சா உட்பட நிறைய போதை பொருள் பழக்கம் அதிகமா இருக்கு அப்படிங்கிற விஷயங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில காதுல வந்துட்டு இருக்கு. அதனால இந்த கஞ்சா உட்பட போதை மருந்து பழக்கத்தை ஒடுக்குறதுக்கு இந்த ஏரியாவில ஸ்பெசிபிக்கா ரொம்ப கடுமையான ஆக்ஷன் எடுங்க.
அது யாரா இருந்தாலும் சரி. எந்த கட்சியை சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி. என்ன அதிகாரத்தில் இருந்தாலும் சரி. இந்த கஞ்சா போதை பொருள் விற்பனை பண்ற யாரா இருந்தாலும் அவங்க மேல சட்டரீதியா இமீடியட்டா எந்த பயமும் இல்லாம ஆக்ஷன் எடுங்க” என கண்டிப்பாகச் ஸ்ல்லி இருக்கிறார். அவர்கள் எல்லாரும் ஓகே சார் எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்புறம்தான் அங்கிருந்து கிளம்பினார் முதலமைச்சர் விஜய்.
அதிகாரிகளுக்குக்கூட தெரியாமல் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிஎம் விஜய் நடத்திய இந்த திடீர் விசிட் காவல் துறையில் சுறுசுறுப்பை ஏற்படுத்துமா? கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த சிஎம் விஜய் கொடுத்த இந்த அதிரடி உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்படுமா?
