https://republictn.com/

தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், ஒரு பக்கம் நிர்வாகம் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், ஆளும் கட்சி தொண்டர்களின் சில அதிரடி நடவடிக்கைகள் தற்போது முதலமைச்சர் விஜய்க்கே ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் என்னவென்றால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நோயாளிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற தகவல் பரவியுள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரடியாக மருத்துவமனைக்குள் சென்று, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

இந்தச் செய்தி வேகமாக பரவியதைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு நிர்வாகத்தில் அரசியல் கட்சியினர் தலையிடலாமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் முதலமைச்சர் விஜயின் கவனத்திற்குச் சென்றதும் அவர் கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. தனது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸியானன் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், “தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடக் கூடாது. குறிப்பாக மருத்துவமனை போன்ற பொதுச் சேவை இடங்களில் தனிச்சையாக ஆய்வு செய்யக் கூடாது” என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றவர்கள் என்றும், சாதாரண கட்சி தொண்டர்கள் தங்களது எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், “இனி இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காது. அரசு இயந்திரம் சுதந்திரமாக செயல்படுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தனது கட்சி தொண்டர்களுக்கு இரும்புக்கரம் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்த முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை, நிர்வாகத்தில் அவரது முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago