Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Kavin murder

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த 2025 ஜூலை மாதம் சாப்ட்வேர் இன்ஜினியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோரான காவல் சார்பு ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர், சாப்ட்வேர் இன்ஜினியரான கவினை கொடூரமான முறையில் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித்தின் சகோதரியை கவின் காதலித்து வந்ததாகவும், சாதி கடந்த காதலை ஏற்க முடியாத காரணத்தால் ஆத்திரமடைந்த சுர்ஜித் இந்த கொலையை செய்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

முதலில் நெல்லை காவல்துறை இந்த வழக்கை விசாரித்த நிலையில், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பின்னர் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் முக்கியமான விவகாரமாக சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் காவல் துறையில் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வந்த அவர்களுக்கு, மகன் சுர்ஜித் செய்ததாகக் கூறப்படும் கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் அவர்களது நெருங்கிய உறவினரான ஜெயபால் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படியுங்க  "தமிழகத்திற்கு கல்வி ஒளி தந்த மாமனிதர்… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காமராஜரின் எளிய இல்லம்!"

இந்நிலையில், தங்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகிய மூவரும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடந்த 2016-17 மற்றும் 2018-19 காலகட்டங்களிலேயே கவினின் தாயாரை நேரில் அழைத்து கிருஷ்ணகுமாரி கடுமையாக எச்சரித்ததாக அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், கொலை நடந்த பின்னர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் தங்களது மகன் சுர்ஜித்தை சந்தித்து, கவினின் உடை, செல்போன் மற்றும் காரின் போலி நம்பர் பிளேட் உள்ளிட்ட தடயங்களை அப்புறப்படுத்துவதற்கு வழிகாட்டியதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறையின் இறுதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் வெறும் ஊகங்களும் கற்பனைகளுமே தவிர, அவற்றை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வாதிட்டார்.

மேலும், மூவரின் செல்போன்களும் ஒரே செல்போன் டவர் பகுதியில் இருந்ததை மட்டும் வைத்து அவர்கள் நேரில் சந்தித்து சதித்திட்டம் தீட்டியதாக முடிவுக்கு வர முடியாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படியுங்க  "இறுதிச்சடங்கில் பார்த்தபோது அதிர்ச்சி.. மகளின் சடலத்தை மாற்றி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை! கதறிய பெற்றோர்!"

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ஆர். விஜயகுமார், சிபிசிஐடி விசாரணையில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தார். கொலைக்குப் பின்னர் சரவணனும் கிருஷ்ணகுமாரியும் தங்களது மகனை சந்தித்து தடயங்களை அழிக்கச் சொன்னதாக கூறப்படுவதற்கு நேரடி சாட்சியமோ அல்லது உறுதியான ஆதாரமோ இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அதேபோல், ஒரே செல்போன் டவர் லொகேஷனில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் இருவரும் நேரில் ஒன்றாக இருந்தார்கள் என்பதை சட்டரீதியாக நிறுவ முடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற செல்போன் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய கொலை வழக்குடன் தொடர்புபடுத்த முயன்றிருப்பது புலனாய்வு அமைப்பின் அனுமானமாக மட்டுமே இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், ஒருவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எஸ்.ஐ தம்பதியான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்க  "மரணக் குழி தோண்டிய மணல் மாஃபியா: தட்டிக்கேட்ட விவசாயியை உயிருடன் புதைக்க ஜேசிபி-யால் தாக்கிய கொடூரம்!"

அதேநேரத்தில், விசாரணையின்போது மனுதாரர்களின் பங்கு தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்தால், விசாரணை நீதிமன்றம் தனது சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடரலாம் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜெயபாலுக்கு எதிரான வழக்கு தொடரும்

இந்த வழக்கில் மூன்றாவது மனுதாரரான உறவினர் ஜெயபாலைப் பொறுத்தவரை நிலைமை மாறுபட்டதாக இருந்தது.

ஜெயபால், கவினை ஏற்கனவே நேரில் சந்தித்து, காதலை கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும், கொலை நடந்த நாளன்று கவினுடன் 24 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் பேசியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயபாலுக்கு சொந்தமான குவாரியில்தான் சுர்ஜித்தின் ரத்தக்கறை படிந்த ஆடைகள் எரிக்கப்பட்டதாகவும், காரின் நம்பர் பிளேட் மற்றும் செல்போன் ஆகியவை நொறுக்கி எரிக்கப்பட்டதாகவும் அவை பின்னர் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணையில் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆதாரங்களை கருத்தில் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஜெயபாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கருதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால், கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ தம்பதியான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஜெயபாலுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago