2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘ரேனிகுண்டா 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர்/டிரைலர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் இணைந்து வெளியிடவுள்ளனர்.
முதல் பாகத்தை இயக்கிய ஆர். பன்னீர்செல்வம், இந்த இரண்டாம் பாகத்தையும் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷாமி திலகன், நிஷாந்த், கனிஃபா, வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி மற்றும் விவேகா எழுதியுள்ளனர். ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஆண்டனி படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார்.
இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தார். அந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
முதல் பாகத்தில் சிறையிலிருந்து தப்பிய சிறுவர்கள் ஆந்திர மாநிலத்தின் ரேனிகுண்டா பகுதியை அடைந்தனர். இரண்டாம் பாகத்தில் அவர்கள் தங்களது இறுதி இலக்கான மும்பை நகரை சென்றடையும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை விட, இந்த இரண்டாம் பாகம் இன்னும் விறுவிறுப்பான, இருண்ட உலகை பிரதிபலிக்கும் குற்றப் பின்னணியிலான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகர் அபிமன்யு ஷாமி திலகன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். அவர், மும்பையில் செயல்படும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஏ பன்னீர்செல்வம் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
படத்தின் சண்டைக் காட்சிகளை ராஜசேகர் வடிவமைத்துள்ளார். பாடல்களுக்கான நடன அமைப்பை பிரபல நடன இயக்குநர்கள் பிருந்தா கோபால் மற்றும் அசார் மேற்கொண்டுள்ளனர்.
‘ரேனிகுண்டா 2’ திரைப்படம் 2026ஆம் ஆண்டிற்குள் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
