Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

முதலமைச்சர் விஜய்யின் மதுரை பயணத்தின்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், கார் வேகமாகச் சென்றபோது பிடி நழுவி சாலையில் கீழே விழுந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் விஜய் மதுரைக்கு சென்றிருந்தார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாமதமானதாகக் கூறப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அவர் மதுரை சென்றார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திட்ட தொடக்க விழா, புதுப்பொலிவு பெற்ற காந்தி அருங்காட்சியகத்தின் திறப்பு விழா மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.

இந்த பயணத்தின் போது, முதலமைச்சரின் கான்வாயில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் வாகனத்தின் பக்கவாட்டில் பிடித்தபடி வந்ததார். கார் வேகமாகச் சென்றபோது திடீரென பிடி நழுவி சாலையில் விழுந்தார்.

தொடரும் சம்பவங்கள்
இது ஒருமுறை நடைபெற்ற சம்பவம் மட்டுமல்ல என்றும், இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போதும் முதலமைச்சரின் கான்வாயில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்தார்.

இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் பாதுகாப்பு அணியில் பணியாற்றும் போலீஸார் கான்வாயில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் இதுவரை மூன்று முறை நடைபெற்றுள்ளன.

இதையும் படியுங்க  மோடிக்கு விஜய் அனுப்பிய ஸ்ட்ராங்க் மெசேஜ்..! தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் காங்கிரஸ்..!

இதனால், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸார் ஏன் ஆபத்தான முறையில் வாகனங்களில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்கு எந்த விதிமுறையும் இல்லை
காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களில் பாதுகாப்புப் போலீஸார் வெளிப்புறத்தில் தொங்கியபடி பயணிக்க வேண்டும் என்று எந்த அரசாங்க விதிமுறையும் இல்லை.

பொதுமக்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தால், அது போக்குவரத்து விதிமீறலாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசியல் அல்லது மத ஊர்வலங்களின்போது வாகனங்களில் வெளிப்புறமாக தொங்கியபடி பயணிப்பவர்களிடமும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரே வாகனங்களுக்கு வெளியே தொங்கியபடி பயணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய நடைமுறை தொடர்கிறதா?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் முதலமைச்சர் கான்வாயில் போலீஸார் வாகனங்களின் வெளிப்புறத்தில் தொங்கியபடி செல்வது போன்ற நடைமுறை தொடங்கியது. அதன்பின்னர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர்களின் கான்வாய்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

ஆனால், தற்போதைய நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் போலீஸார் தொடர்ந்து கீழே விழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

கான்வாய் ஓட்டுநர்களின் அனுபவம் முக்கியமா?
முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களை ஓட்டுவதற்கு முன்பு சிறப்பு பயிற்சி பெற்ற போலீஸ் ஓட்டுநர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விஐபி வாகனங்களை இயக்குவதில் சிறப்பான அனுபவம் பெற்றவர்கள்.

இதையும் படியுங்க  "பரந்தூரைத் தொடர்ந்து செம்மஞ்சேரிக்கும் 'செக்'.. தவெக அரசின் அதிரடி வேட்டை! ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகிறதா சென்னை?"

கூட்ட நெரிசலுக்கு இடையே வாகனத்தை கட்டுப்படுத்துவது, தேவையான இடங்களில் வேகத்தை அதிகரிப்பது, திடீரென குறுக்கே வரும் நபர்கள் அல்லது வாகனங்கள் இருந்தால் அதிர்வில்லாமல் வாகனத்தை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களில் அவர்களுக்கு பயிற்சி உண்டு.

மேலும், கான்வாய் செல்லும் பாதையில் எங்கு வளைவு உள்ளது? எங்கு வேகத்தைக் குறைக்க வேண்டும்? எங்கு பிரேக் பயன்படுத்த வேண்டும்? எங்கு வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற விஐபி டிரைவிங் நுட்பங்களில் அவர்கள் அனுபவம் பெற்றுள்ளனர்.

விஜய்யின் தனிப்பட்ட ஓட்டுநர் குறித்த கேள்வி
தற்போது முதலமைச்சர் விஜய்க்கு அரசு தரப்பு பாதுகாப்பு இருந்தாலும், அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அணியும் இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் முதலமைச்சரின் காரை அவரது தனிப்பட்ட ஓட்டுநரே இயக்குகிறார்.

விஜய் நடிகராக இருந்த காலத்தில் படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போது ரசிகர்கள் கூட்டத்தை கடந்து வாகனத்தை இயக்கிய அனுபவம் அவரது தனிப்பட்ட ஓட்டுநருக்கு இருக்கிறது. ஆனால், திரைப்பட நடிகரின் தனிப்பட்ட வாகனத்தை இயக்குவதற்கும், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ கான்வாய் வாகனத்தை இயக்குவதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்கிறது.

குறிப்பாக, கான்வாய் வாகனத்தில் பாதுகாப்புப் போலீஸார் வெளிப்புறத்தில் நிற்கும் சூழலில், வாகனத்தின் வேகம் மற்றும் பிரேக்கிங் முறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

3 முறை விழுந்தும் நடவடிக்கை இல்லையா?
இதுவரை மூன்று முறை பாதுகாப்புப் போலீஸார் கான்வாயில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுபோன்ற ஆபத்தான நடைமுறை ஏன் இன்னும் தொடர்கிறது? பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரங்களில் சிலர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  விஜயை வீழ்த்தும் வியூக வகுப்பாளர்..! நண்பர்களை இறக்கி ஜான் ஆட்டம்..! குமுறும் நிர்வாகிகள்..!

வாகனத்தின் பக்கவாட்டில் நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தால், போலீஸாரின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வாகனத்தில் பாதுகாப்பாக இணைக்கும் வகையிலான பெல்ட் அல்லது ஹுக் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமா? என்பதும் விவாதமாகியுள்ளது.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை?
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும் குடும்பம் கொண்ட மனிதர்கள்தான். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எந்த நடைமுறையும் இருக்கக்கூடாது என்பதே இந்த விவகாரத்தில் எழும் முக்கியமான கேள்வி. கான்வாயில் இருந்து போலீஸார் கீழே விழுந்து காயமடைந்தால், அடுத்த கட்டமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முன்பே பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்பதும் தற்போது கேள்வியாகியுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், கான்வாய் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago