Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு திருவிழா, தமிழர்களின் பாரம்பரிய நீர் வழிபாட்டு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும் காலத்தை வரவேற்று, இயற்கைக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா அனுசரிக்கப்படுகிறது.

வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழர்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய இந்த விழா, இயற்கை வளம், நீர்வளம் மற்றும் விவசாய செழிப்பை போற்றும் திருநாளாக கருதப்படுகிறது.

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழியின் பின்னணி

Republic Tamil

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற தமிழ்ப் பழமொழிக்கேற்ப, உழவர்கள் தங்களது புதிய விவசாயப் பணிகளை ஆடிப்பெருக்கு நாளில் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆடி மாதத்தில் பெய்யும் மழையும், ஆறுகளில் பெருகும் நீரும், விவசாயத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதால், இந்த நாளை விவசாயிகள் மிகவும் மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர்.

நதிக்கு நன்றி செலுத்தும் பாரம்பரிய வழிபாடு

ஆடிப்பெருக்கு நாளன்று மக்கள் குடும்பத்துடன் நதிக்கரைகளுக்குச் சென்று, நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.

சக்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் உள்ளிட்ட கலவைச் சாதங்களை படைத்து, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை வழிபடுவது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.

இதையும் படியுங்க  "கொண்டாட்டம் என்ற பெயரில் கொடூரம்! கல்யாண வீட்டு வேடிக்கை விளையாட்டால்... ஒரு பெண்ணின் வாழ்நாள் கண்ணீர்!

சுமங்கலிப் பெண்களின் சிறப்பு வழிபாடு

Republic Tamil

இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலிக்கயிற்றை மாற்றி, புதிய மஞ்சள் கயிற்றை அணிவது வழக்கமாக உள்ளது.

தீர்க்க சுமங்கலியாக வாழவும், குடும்பத்தில் வளமும் நலமும் நிலைக்கவும் பெண்கள் மஞ்சள், குங்குமம், மலர்கள் கொண்டு வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டியும், இனிய இல்லற வாழ்க்கை அமைய வேண்டியும், நதிக்கரையில் உள்ள மரங்களில் மஞ்சள் கயிற்றைக் கட்டி பிரார்த்தனை செய்வதும் பல பகுதிகளில் இன்றளவும் தொடரும் பாரம்பரியமாக உள்ளது.

வளம் பெருகும் நாள் என்ற நம்பிக்கை

ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கப்படும் காரியங்கள் மற்றும் வாங்கப்படும் பொருட்கள் பல மடங்கு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதன் காரணமாக பலர் இந்த நாளில் தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவதை மங்களகரமாகக் கருதுகின்றனர்.

தங்கம் வாங்க இயலாதவர்கள், மஞ்சள், கல் உப்பு, அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து, வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்ற ஐதீகம் நிலவி வருகிறது.

ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வு

Republic Tamil

ஆடிப்பெருக்கு நாளில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து காவிரியம்மனுக்கு பட்டுப்புடவை, மாலை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படும்.

இதையும் படியுங்க  5 DIY Home Decor Ideas on a Budget

காவிரி நதியை தனது மகளாகக் கருதி, ரங்கநாதப் பெருமாள் சீதனம் வழங்குவதாக இந்த நிகழ்வு பக்தர்களால் போற்றப்படுகிறது.

ஆன்மீக வரலாறு

மகாபாரதப் போருக்குப் பிறகு, போரில் உயிரிழந்த தங்களது உறவினர்களின் ஆத்மா சாந்தியடையவும், பாவங்கள் நீங்கவும் பாண்டவர்கள் காவிரி கரைக்கு வந்து திதி கொடுத்து வழிபட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

அவர்கள் ஆடி மாதம் 18-ஆம் நாளில் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக ஆன்மீக வரலாறு குறிப்பிடுகிறது.

முளைப்பாரி வழிபாடு

தமிழகத்தின் சில பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நவதானியங்களை முளைக்க வைத்து, ஆடிப்பெருக்கு நாளன்று அந்த முளைப்பாரியை ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கரைத்து, விவசாய வளமும் மழை வளமும் பெருக வேண்டி மக்கள் வழிபடுகின்றனர்.

தமிழ் தேதியின்படி கொண்டாடப்படும் தனித்துவமான விழா

பெரும்பாலான பண்டிகைகள் திதி, நட்சத்திரம் அல்லது கிழமைகளை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றன.

ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் தேதியன்று, அதாவது “ஆடி 18” என்ற தமிழ் நாளின் அடிப்படையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தனித்துவமான தமிழர் திருவிழாவாக விளங்குகிறது.

இதையும் படியுங்க  "பந்த் போராட்டத்திற்கு இடமில்லை..! கர்நாடகாவின் நலன் காக்கப்படும்!" - காவிரி விவகாரத்தில் டி.கே. சிவகுமார் அதிரடி!

இதன் காரணமாக, இந்த விழா “ஆடி 18” அல்லது “பதினெட்டாம் பெருக்கு” என்றும் அழைக்கப்படுகிறது.

நெல்லை தாமிரபரணி கரையில் சிறப்பு வழிபாடு

Republic Tamil

ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

காலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலிகளை சுவாமி முன்பாக வைத்து, மஞ்சள், குங்குமம் அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர், மலர்களால் அர்ச்சனை செய்து, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆடிப்பெருக்கு வழிபாட்டை பக்தியுடன் நிறைவேற்றினர்.

குடும்ப நலன், தீர்க்க சுமங்கல வாழ்வு, வளமான இல்லற வாழ்க்கை மற்றும் செல்வச் செழிப்பு வேண்டி பெண்கள் மனமாரப் பிரார்த்தனை செய்தனர்.

இதனால், இன்று காலை முதலே குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட நதிக்கரைகளிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago