Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் ஜீவா மற்றும் யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ சுதாகர் நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த டீசரில், சுதாகர் நடிகர் ஜீவாவிடம் பேசும், “உன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்த மண்டபத்துக்கு போனவருதான்… இன்னைக்கு தமிழ்நாட்டோட டேரிங்கான CM” என்ற வசனம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும், தமிழக முதலமைச்சராக சித்தரிக்கப்படும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த டீசர் மூலம் அவருக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர் ஜீவா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இதையும் படியுங்க  "வெற்றிக்கு பின்னால் 'சூர்யா'… பெருமைக்கு பின்னால் 'விஜய்'… ஆர்.ஜே.பாலாஜிக்கு நெட்டிசன்கள் கண்டனம்!"

இது நடிகர் ஜீவாவின் 47-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா, ஜீவாவுக்கு ஜோடியாக, ஜெனிலியா நடித்த கதாபாத்திரத்தை நினைவூட்டும் வகையிலான துறுதுறுப்பான வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் ஜீவாவின் நண்பராக நடித்துள்ளதுடன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ‘பரிதாபங்கள்’ குழுவினரும் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இதனிடையே, டீசரில் இடம்பெற்றுள்ள விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிடும் வசனம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago