ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசைத் தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நவம்பர் 3-ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட் டாலும், இதன் பின்னணியில் முக்கிய அரசியல் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தற்போது ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசை ஆதரித்து வருகிறார். இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் மீது ‘கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்’ கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் டிடிவி தினகரன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையிலும், ஆளுநரிடமும் மனு அளித்திருந்த நிலையில், தற்போது நேரில் சந்தித்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மற்றொருபுறம், அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 1-ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
“விலைபோய் விலகிப் போனவர்களைத் தவிர, நம்மிடமிருந்து பிரிந்து நிற்பவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தல் அறிவிப்பு வந்துவிடும் என்பதால், நாம் அனைவரும் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
அதிமுக வட்டாரங்கள் கொடுக்கும் ‘ட்விஸ்ட்’
“விலை போனவர்களை விட்டுவிட்டு, பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது சசிகலாவையோ அல்லது டிடிவி தினகரனையோ குறிக்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரையே அவர் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுப் பேசியதாககூறுகிறார்கள்.
