முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரும், தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநருமான ஏ. அருண் ஐபிஎஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அருண் ஐபிஎஸ்தான் காரணம்” என அந்தப் பெண் தனது புகார் மனுவில் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை போரூரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்தப் புகார் மனுவை அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் புகார் மனுவில், வழக்கறிஞர் செல்வ திருமுருகன் தன்னைத் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்போதைய சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்ஸிடம் புகார் அளிக்கச் சென்றதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார். ஆனால், தனது புகாரை ஏற்றுக்கொள்ளாமல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வழக்கறிஞர் திருமுருகன் ஐஏஎஸ் அதிகாரி சுகந்தியின் உறவினர் என்பதால், அவருக்கு ஆதரவாக அருண் ஐபிஎஸ் செயல்பட்டதாகவும், அதன் காரணமாக மாங்காடு காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் மஞ்சுளா புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பின்னர், அருண் ஐபிஎஸ் தரப்பில் பல்வேறு வகைகளில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அருண் ஐபிஎஸ்தான் காரணம் என்றும் மஞ்சுளா குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “2023-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞர் செல்வ திருமுருகனுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் மீது தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால், அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான் அளித்த வாக்குமூலங்களை மாற்றி எழுதுவதாகவும், காவல்துறையினர் தன்னை மிரட்டியதாகவும்” அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸிடம் புகார் அளிக்கச் சென்றதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார். அப்போது ஐஏஎஸ் அதிகாரி சுகந்தியின் பெயரைக் குறிப்பிட்டவுடன், அருண் ஐபிஎஸ் தன்னை முறைத்துப் பார்த்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ஏவிபி மருத்துவமனையின் டாக்டர் சுப்பையா தொடர்பான விவரங்களை கூற வந்தபோதுகூட, தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முழுமையாகக் கேட்காமல், தன்னைப் பார்த்து முறைத்ததுடன், ‘நீங்கள் போகலாம்’ என்று கூறினார்.
தான் அந்த இடத்தை விட்டு முழுமையாக வெளியேறுவதற்குள், ‘இந்த வழக்குகள் அனைத்தையும் க்ளோஸ் பண்ணுங்கள்’ என்று கூறியதாகவும், பின்னர் ஐஏஎஸ் அதிகாரியை அழைத்து வழக்குகளை முடிக்குமாறு உத்தரவிட்டதாகவும்” மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
தனது மனு குறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் பரவாயில்லை என்றும், ஆனால் எந்தவித விசாரணையும் நடத்தாமல் தனது வழக்கை முடித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சவுக்கு சங்கர் புகாரும் அவதூறு வழக்கும்
இதனிடையே, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தன்னை கொலை செய்ய அருண் ஐபிஎஸ் கூலிப்படையை ஏவியதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அருண் ஐபிஎஸ் தரப்பில் சவுக்கு சங்கருக்கு எதிராக ₹1 கோடி நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியாற்றியபோது, ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவரது செயல்பாட்டுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது.
தற்போது அருண் ஐபிஎஸ் மீது பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகார் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில் இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. எனவே, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் அதன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
