நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). மத போதகரான இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஊழியம் செய்வதாக அழைத்து செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 சிறுமிகளை அடைத்து வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுமிகளை மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாமை அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து நீதிபதி சுரேஷ் குமார் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மத போதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த மத போதகருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
