நீலகிரி மாவட்டம் உதகையில், மதுபோதையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதுடன், தன்னை மடக்கிப் பிடிக்க முயன்ற காவலரை கன்னத்தில் அறைந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
உதகை மார்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்ற அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதாக தெரிகிறது.
விபத்தை ஏற்படுத்திய பின்னரும் காரை நிறுத்தாமல் அந்த நபர் தொடர்ந்து சென்றுள்ளார். இதைக் கவனித்த போக்குவரத்து போலீஸாரும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
அப்போது காரில் இருந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவரை பணியில் இருந்த காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த நபர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், சீருடையில் இருந்த காவலரை அவர் திடீரென கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதையடுத்து போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நீலகிரி மாவட்டம் கடநாடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் 57 வயதான சீனிவாசன் என்பது தெரியவந்தது.
மது போதையில் காரை ஓட்டியதுடன், அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்றதாகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவலரை தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உதகை நகர போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், காவலரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவலர் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்தச் சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், தற்போது உதகையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அடுத்த அதிர்ச்சியாக அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூர் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது உதகை சம்பவமும் காவலர்களின் பணியின்போது அவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர், மதுபோதையில் வாகனம் ஓட்டி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவலரையே தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள், விபத்து ஏற்பட்ட விதம் மற்றும் தலைமை ஆசிரியர் சீனிவாசனின் மதுபோதையின் நிலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
