Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) டாக்டர் சி. சைலேந்திர பாபு, மொபைல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். தெரியாத எண்களில் இருந்து வரும் SMS, WhatsApp மெசேஜ்களில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தாலோ, APK கோப்புகளை பதிவிறக்கம் செய்தாலோ வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“உங்களது நெட் பேங்கிங் கணக்கு அல்லது ஏடிஎம் கார்டு முடக்கப்பட உள்ளது. உடனடியாக PAN கார்டு விவரங்களைப் புதுப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்” எனக் கூறி மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற மெசேஜ்களை நம்பி லிங்கைத் திறக்கக் கூடாது.

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறினாலும், OTP, PIN, பாஸ்வேர்ட் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எந்தவொரு வங்கியும் தொலைபேசி அல்லது SMS மூலம் இத்தகவல்களைக் கேட்காது.

மேலும், “உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறி மோசடி செய்யும் புதிய முறையும் அதிகரித்துள்ளதாக சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இதுபோன்ற மெசேஜ் வந்தவுடன் அவசரப்பட்டு வங்கிக் கணக்குக்குள் சென்று பணம் வந்துள்ளதா எனச் சரிபார்க்கக் கூடாது.

இதையும் படியுங்க  ஷெட்டில் நின்ற கார்... உள்ளே வீசிய துர்நாற்றம்: மதுரையை உலுக்கிய மர்ம மரணம்!

சைபர் குற்றவாளிகள் ஏற்கெனவே ஒரு பணப் பரிமாற்ற கோரிக்கையை உருவாக்கி வைத்திருக்கலாம். நீங்கள் PIN அல்லது பாஸ்வேர்டை உள்ளிடும் நேரத்தில் அந்தப் பணம் அவர்களின் கணக்குக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.

இதுபோன்ற மெசேஜ் வந்தால் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பின்னர் அதிகாரப்பூர்வ வங்கி செயலி அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்புகொண்டு மட்டுமே கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும், “தவறுதலாக உங்கள் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டேன்; நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன், அதில் சென்று பணத்தைத் திருப்பி அனுப்புங்கள்” என சைபர் குற்றவாளிகள் கூறலாம். அவர்கள் அனுப்பும் லிங்க் அல்லது APK மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.

அதைத் திறப்பதன் மூலம் மொபைல் போனும், வங்கிக் கணக்கும் சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை உடனடியாகத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட எண்ணை பிளாக் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்க  "வானம்பாடியின் சிறகு உதிர்ந்தது..! சாகித்ய அகாதமி கவிஞருக்கு அரசு மரியாதை அறிவித்த CM விஜய்!"

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் பொதுமக்கள் சுமார் ₹1,800 கோடியை ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்துள்ளதாக சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரோடு மற்றும் கோவை மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் குற்றவாளிகள் தற்போது தங்களது சொந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தாமல், ஏழை மக்கள் மற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு பெற்று பணப் பரிவர்த்தனை செய்வதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தெரியாத நபர்களிடம் ஆதார், PAN கார்டு அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது. தங்களது கணக்கு சைபர் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டால், கணக்கு உரிமையாளரும் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம்.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ஆன்லைன் முதலீடு, பகுதி நேர வேலை மற்றும் YouTube Like Task போன்ற பெயர்களில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அறிமுகமில்லாத செயலிகளில் பணம் செலுத்தவோ, தெரியாத நபர்களின் அறிவுறுத்தலின்படி முதலீடு செய்யவோ கூடாது.

இதையும் படியுங்க  AI கொடுத்த ஐடியா… காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லையில் 'ஜென் ஜி' கிட்ஸ் விபரீதம்..!

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், தாமதிக்காமல் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். மேலும், National Cyber Crime Reporting Portal மூலமும் உடனடியாகப் புகார் அளிப்பது அவசியம். மோசடி நடந்தவுடன் விரைவாகப் புகார் அளிப்பதன் மூலம் பணத்தை முடக்கி மீட்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago