Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியம், காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சீருடையில் இருக்கும் சில மாணவிகள், வகுப்பறைக்கு வெளியே மேஜை ஒன்றை வைத்து, அதில் உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை வைத்துள்ளனர். பின்னர், அவர்கள் தங்களுக்குள் மதுபாட்டிலை மாற்றி மாற்றி குடிப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு மாணவி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தச் சம்பவம் சமீபத்தில் நடந்தது அல்ல என்பதும், கடந்த ஜூலை மாதமே நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

பள்ளியில் போட்டித் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதாகவும், அந்த வகுப்பில் கலந்து கொண்ட சில மாணவிகள், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளில் ஒருவரின் ஆண் நண்பர் மதுபாட்டில் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  "விளம்பரத்திற்காக இழிவான பேச்சா? கொதித்தெழுந்த அங்கன்வாடி ஊழியர்கள்..

இந்தச் சம்பவத்தை சக மாணவிகள் வீடியோவாகப் பதிவு செய்து அன்றே பள்ளித் தலைமை ஆசிரியையிடம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மாணவிகளை அழைத்து தலைமை ஆசிரியை கண்டித்ததாகவும், இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெறவில்லை என்றும், வீட்டில் வைத்துதான் நடந்தது என்றும் எழுதி வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை பிரமீளா எவாஞ்சலின் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் ஒழுங்கீனமாகச் செயல்பட்ட மாணவிகள் மீதும் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை விதிகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் மற்றும் மாணவிகளுக்கு மதுபானம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க  கோவிலில் கல்யாணம்… அடுத்த நிமிடமே போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம்! கரூரில் பரபரப்பு
Republic Tamil

பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் ஏற்படுவதைத் தடுக்க, பள்ளிகளில் முறையான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பள்ளி நிர்வாகம், கல்வித்துறை மற்றும் காவல்துறை இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago