Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தாய்லாந்தின் புகெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் முக்கிய விமானி, கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், விமானம் நடுவானில் திடீரென சுமார் 300 அடி கீழே சரிந்து, கடுமையாகக் குலுங்கியதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட காற்றோட்ட மாற்றம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழ்நோக்கி சரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், விமானத்தின் முக்கிய விமானி தனது இருக்கையில் இல்லை என்றும், பின்னர் அவசரமாக தனது இருக்கைக்குத் திரும்பி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் திடீரெனக் குலுங்கியதால், சீட் பெல்ட் அணியாத சில பயணிகள் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் 24 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) மற்றும் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) ஆகிய அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வழக்கமான நடைமுறையின்படி விமானத்தில் பணியாற்றிய இரு விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படியுங்க  NTA எடுத்த விஸ்வரூபம்! இந்தியாவில் Telegram-க்கு திடீர் தடை – பின்னணி என்ன?

இதில், முக்கிய விமானிக்கு நடத்தப்பட்ட முதல் கட்டப் பரிசோதனையிலும், தொடர்ந்து அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும் அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விமானம் புறப்படுவதற்கு முன்பே அந்த விமானியின் கண்கள் சிவந்து காணப்பட்டதாகவும், அவர் போதையில் இருப்பது போல் தெரிந்ததாகவும் சக பயணி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கஞ்சா பயன்படுத்தியதாகக் கூறப்படும் முக்கிய விமானி மற்றும் அவருடன் பணியில் இருந்த உதவி விமானி ஆகிய இருவரையும் DGCA உடனடியாகப் பணியில் இருந்து விலக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ‘Serious Incident’ என வகைப்படுத்தப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தூக்க மாத்திரையும் உட்கொண்டதாகத் தகவல்

இதற்கிடையே, முக்கிய விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது மட்டுமின்றி, தனக்கு இருந்த தூக்கப் பிரச்சினைக்காக சில மாத்திரைகளையும் உட்கொண்டு வந்ததாக ஏர் இந்தியாவின் உள்நாட்டு விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கஞ்சா மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால், மூளையின் செயல்பாடு, விழிப்புணர்வு மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  "8 அடி 10 அங்குல கூந்தல்!  உக்ரைன் சாதனையை முறியடித்து 'கின்னஸ்' வென்ற இந்தியப் பெண் ரேணு தரியால்!"

மேலும், விமானத்தில் பணியாற்றிய ஏர் ஹோஸ்டஸ்கள் உள்ளிட்ட கேபின் க்ரூ உறுப்பினர்கள், முக்கிய விமானியின் விசித்திரமான மற்றும் மோசமான நடத்தை குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விமானத்தை இயக்கும் நிலையில் இல்லை என்பதை சக ஊழியர்களே கவனித்ததாகவும் கூறப்படுகிறது.

300 அடி சரிந்த விமானம்

விமானம் நடுவானில் சுமார் 300 அடி சரிந்தபோது, விமானத்தில் ‘Stall Warning’ எனப்படும் எச்சரிக்கை சிக்னல் ஒலித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானம் கீழ்நோக்கி ஆபத்தான நிலையில் செல்வதை உணர்த்தும் அந்த இக்கட்டான தருணத்தில், முக்கிய விமானி தனது இருக்கையில் இல்லாததாக கூறப்படுகிறது.

அப்போது, இளம் உதவி விமானி சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் விமானத்தில் இருந்த 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களின் உயிருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விமானம் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மத்திய அரசு தீவிர நடவடிக்கை

இந்தச் சம்பவத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனை மத்திய அமைச்சகம் நேரில் அழைத்து, விமான நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  கதறவிட்ட Gen Z கிட்ஸ்!" – 'NEET' கோபத்தால் கல்வி அமைச்சர் மகளின் சோஷியல் மீடியா பக்கங்கள் முடக்கம்!

இதனிடையே, விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பதையும் அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்து வருகின்றனர். விமானம் 300 அடி கீழே சரிந்ததற்கான காரணம் முழுமையாகத் தெரியவரும் வரை, தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதத் தவறு என இரு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கிரிமினல் நடவடிக்கைக்கு ஆலோசனை

விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் முக்கிய விமானி மீது மருத்துவச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுடன், கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விமானம் 300 அடி கீழே சரிந்தபோது முக்கிய விமானி இருக்கையில் இல்லாததும், அவர் கஞ்சா மற்றும் தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இளம் உதவி விமானியின் துரிதமான செயல்பாட்டால் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களின் உயிருக்கு ஏற்பட்ட பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago