ஏற்கனவே பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு பேரிடியாக அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு’ வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், தமிழக மின்வாரியம் (டான்ஜெட்கோ) சார்பில் சுமார் 45,800 மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலில் சந்தை விலையை விட கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, சுமார் 397 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் மீது நேரடிப் புகார்கள் முன்வைக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், “மாநில அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, மாநில அரசின் கீழ் இயங்கும் விசாரணை அமைப்பு விசாரிப்பது நியாயமாக இருக்காது” என்று கூறி, இந்த ஊழல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரிய இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், இந்த ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சிக்கல்கள்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு செந்தில் பாலாஜிக்கு மூன்று முக்கிய வழிகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வழக்கு இப்போது சிபிஐ வசம் சென்றுள்ளது. சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கும்போது, கொள்முதல் தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். இது செந்தில் பாலாஜிக்கு நேரடி நெருக்கடியைத் தரும்.
ஏற்கனவே சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, இந்த சிபிஐ விசாரணை மற்றொரு பின்னடைவு. சிபிஐ தாக்கல் செய்யும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை மீண்டும் தனது பிடியை இறுக்க வாய்ப்புள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில், 397 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிபிஐ விசாரணை என்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கும், கட்சிக்கும் பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.
