Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET) நீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Republic Tamil

திருச்சியில், தலைமை தபால் நிலையம் அருகே திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியதுடன், திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படியுங்க  "ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு 10 நாளில் தீர்வு! பெரம்பூரில் மிரட்டும் முதல்வர் விஜய்யின் மாடல் அலுவலகம்!"

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முயன்றதால், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு காவல் வாகனங்களில் ஏற்றி கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், நேற்று இரவு முதலே திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தனர். குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போராட்டங்கள் நடைபெறக்கூடிய முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருச்சி மட்டுமின்றி, சென்னை எழும்பூர், கோவை, மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவுத் திட்டம் ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை!
Republic Tamil

இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால்தான் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படுவதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களைக் காவல்துறையை பயன்படுத்தி கைது செய்வது ஆளும் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் முன்பு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் அவருடன் இருந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்ல வளாகத்தில், நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றுகை மற்றும் தர்ணா போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதையும் படியுங்க  "நண்பனுக்காக நின்ற பிளஸ் 2 மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! சென்னை திருவொற்றியூர் கொலையில் 12 சிறார்கள் கூண்டோடு கைது!"
Republic Tamil

மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களாகக் கருதி ஒடுக்கக் கூடாது என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் சி.ஆர்.பி.எஃப். படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago