Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னையில், தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து ஏமாற்றியதுடன், பின்னர் வாட்ஸ்அப் மூலம் ஆபாசப் படங்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் அரசு மருத்துவர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அரசு பணியில் சேர்ந்த மூன்றே நாட்களில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் செல்வவேல், தற்போது தஞ்சை மாவட்டம் மருங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெளியாகியுள்ள தகவலின்படி, மாற்றுத் திறனாளியான செல்வவேலின் மருத்துவக் கல்விக்காக அவரது அக்கா, சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. தனது மகளை செல்வவேலுக்கு திருமணம் செய்து வைப்பார் என்ற நம்பிக்கையிலேயே இந்த உதவியை அவர் செய்ததாகவும், செல்வவேலும் தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பணத்தின் உதவியுடன் செல்வவேல் மருத்துவப் படிப்பை முடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், படிப்பை முடித்த பிறகு தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடன் மருத்துவம் படித்த மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "ஏடிஎம் கார்டை வாடகைக்கு எடுத்தா ஜெயில்தான்! கிரிப்டோ மோசடி கும்பலை சுருட்டிய ராமநாதபுரம் சைபர் கிரைம்!"

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்காவின் மற்றொரு மகள் சட்டப்படிப்பில் சேர விரும்பி தனது தாயிடம் கல்விச் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு, தனது தம்பி செல்வவேலின் மருத்துவப் படிப்புக்காக வழங்கிய 5 லட்சம் ரூபாயை திரும்பப் பெற்று சட்டப்படிப்பில் சேருமாறு அவரது தாய் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இளம்பெண் தனது தாய்மாமாவான செல்வவேலை தொடர்புகொண்டு, மருத்துவக் கல்விக்காக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாயை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு செல்வவேல் கடும் கோபமடைந்து, தனது அக்கா மகள் என்றும் பாராமல் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி, மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், வழக்கு சைபர் கிரைம் போலீசாரிடம் மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், மருத்துவர் செல்வவேல் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்க  நாசா NSS விண்வெளி மாநாட்டில் கோவை மாணவர்: சர்வதேச அரங்கில் புதிய வரலாறு!

இதையடுத்து, செல்வவேல் தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருவதை அறிந்த போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அரசு பணியில் சேருவதற்கு முன்பு செல்வவேல் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியதோடு, தனது வீட்டின் அருகே தனியார் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான நியமன விழாவில், தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடந்த 14-ஆம் தேதி செல்வவேல் அரசு மருத்துவருக்கான பணிநியமன ஆணையை பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 15-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

ஆனால், அரசு பணியில் சேர்ந்த மூன்றே நாட்களில், ஆபாசப் படங்கள் அனுப்பி மிரட்டிய புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட மருத்துவர் செல்வவேல் மீது தஞ்சாவூரிலும் ஏற்கனவே மற்றொரு குற்றவழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வழக்கின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க  "சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன்!"

இந்தச் சம்பவம், குடும்ப நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதோடு, பெண்களுக்கு எதிரான இணையவழி தொல்லைகள் மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago