அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social), ட்ரம்பின் பதிவுகளை மில்லிசெகண்ட் வேகத்தில் மற்றவர்களுக்கு முன்பாகப் பெறுவதற்கான ‘Truth API’ என்ற புதிய பிரீமியம் தரவுச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாதம் 100,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1 கோடி) வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும், மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் இணையும் நிறுவனங்களுக்கு சலுகை கட்டணமும் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்ப் வெளியிடும் பதிவுகள் உலகளாவிய பங்குச் சந்தை, கச்சா எண்ணெய் விலை, வரி விதிப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தச் சேவை குறிப்பாக ஹெட்ஜ் ஃபண்டுகள், முதலீட்டு வங்கிகள், அல்காரிதமிக் டிரேடிங் நிறுவனங்கள் மற்றும் பெரிய நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் பதிவுகளுடன், ட்ரூத் சோஷியலில் செல்வாக்கு மிக்க 10 முக்கிய கணக்குகளின் பதிவுகள் மற்றும் 2022 முதல் உள்ள பழைய ஆவணக் காப்பகத் தரவுகளும் இந்த சேவையில் இடம்பெறவுள்ளன. இந்த பிரீமியம் சேவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அமெரிக்காவில் அரசியல் மற்றும் நிதித்துறை வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பணம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும், இது சந்தையில் சில நிறுவனங்களுக்கு கூடுதல் வர்த்தக நன்மையை வழங்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ட்ரம்ப் மீடியா குழுமத்தில் ட்ரம்ப் குடும்பத்தினருக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதால், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே நேரடியாகப் பயனளிக்கும் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
எனினும், சட்ட வல்லுநர்கள் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளனர். இந்தத் தரவு பணம் செலுத்தத் தயாராக இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சமமாக வழங்கப்படுவதால், இது அமெரிக்காவின் உள்விவர வர்த்தகச் சட்டங்களை மீறுவதாகக் கருத முடியாது என்று அவர்கள் விளக்குகின்றனர்.
இதேபோன்ற கட்டணத் தரவுச் சேவைகளை எக்ஸ் (X) உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுகுறித்து ட்ரம்ப் மீடியா குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், பல முதலீட்டு நிறுவனங்கள் தற்போது தங்களது தரவுகளை டேட்டா ஸ்கிராப்பிங் மூலம் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், அதனைத் தடுத்து அதிகாரப்பூர்வமான, பாதுகாப்பான மற்றும் வருவாய் ஈட்டும் தரவுச் சேவையாக Truth API அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அதிவேக சேவை தொழில்முறை முதலீட்டு நிறுவனங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுப் பயனர்கள் எப்போதும் போல ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்பின் பதிவுகளை இலவசமாகப் பார்க்க முடியும் என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
