https://republictn.com/

விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் ‘தொங்கு சட்டசபை’ நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களிலும், ஆளுங்கட்சியான திமுக 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 5 இடங்களையும், பாமக 4 இடங்களையும் பிடித்துள்ளன. விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதில் விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்வதால் அந்த கட்சிக்கு 107 இடங்கள் உள்ளன.

இந்த முடிவுகளின்படி, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. திமுக- அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் களமிறங்கிய விஜய்க்கு, இப்போது ஆட்சி அமைப்பதில் பெரும் சவால்கள் எழுந்துள்ளன. விஜய் தரப்பு, காங்கிரஸ் 5, பாமக -4 ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் பலம் 116-ஆக உயரும். மெஜாரிட்டிக்கு இன்னும் 2 இடம் தேவை என்பதால், தலா 2 இடங்களை வைத்துள்ள விசிக அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழல். ஆனாலும், கொள்கை ரீதியாக மாறுபட்ட பல சிறிய கட்சிகளை இணைத்து ஆட்சி நடத்தினால், அது எந்த நேரத்திலும் கவிழக்கூடும் என்ற அபாயமும் உள்ளது.

ஒரு நிலையான ஆட்சியை நடத்துவது விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறும். இந்தச் சூழலில்தான், தமிழக அரசியலில் ‘டெல்லி மேலிடத்தின்’ தலையீடு இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக ஆட்சி அமைக்க அதிமுக ‘வெளியிலிருந்து ஆதரவு’ வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுப்படாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் நேரடியாகக் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் 53 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்தால், விஜய் மிக வலிமையான, நிலையான அரசை நடத்த முடியும். டெல்லியின் இந்த வியூகத்திற்குப் பின்னால் ஒரு நீண்டகால அரசியல் திட்டம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

திமுக – அதிமுக மோதலைத் தாண்டி, ஒரு புதிய சக்தியை வளர்த்து விடுவதன் மூலம் திராவிட அரசியலின் அடித்தளத்தை மாற்றியமைக்க பாஜக முயல்கிறது. அதிமுகவின் ஆதரவுடன் விஜய் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமித் ஷாவால் முடியும். 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக மற்றும் அதிமுகவை ஒரே குடையின் கீழ் கொண்டு வர இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். ஆ னால், எடப்பாடி பழநிசாமி தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “நாங்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், புதிய கட்சிக்கு ஆதரவு அளிப்பது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” என கருதுகிறார்.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளைத் தங்களுக்கு எதிரான சக்தியாகவே பார்க்கிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தவெக-விற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். குறிப்பாக, நிதி ஒதுக்கீடு, மாநிலத் திட்டங்களுக்குப் பிரதமரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸுடன் கைகோர்ப்பது பாஜகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என விஜய் கருதுவதாகத் தெரிகிறது.

ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ள போதும், விஜய் காங்கிரஸைத் திட்டமிட்டே தள்ளி வைப்பதாகத் தகவல். காங்கிரஸ் தரப்பு இது குறித்து “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு விஜய் தரப்பிலிருந்தோ, தவெக-வின் முக்கிய நிர்வாகிகளிடமிருந்தோ காங்கிரஸ் தலைமைக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை” என்கின்றனர். கூட்டணியைப் பற்றிப் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இருந்தபோதும், விஜய் தரப்பு காட்டும் மௌனம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எடப்பாடி பழனிசாமி தரப்பு விஜய் ஆட்சி அமைக்க ஒத்துழைக்க மறுத்தால், விஜய்க்கு காங்கிரஸ் தயவு தேவை. ஆனால், விஜய் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள பாஜக தலைமையின் கண்ணசைவில் அதிமுகவை சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தவெகவில் விரைவில் இணைகிறார்கள் என்று தகவல். இதற்காக செங்கொட்டையன்- வேலுமணி இடையே பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக நடந்து முடிந்ததாகவும், 30 எம்.எல்.ஏக்களும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாகவும், விரைவில் விஜய் முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago