https://republictn.com/

தமிழக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிர்வுகளைச் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே.விஜய் இளஞ்செழியன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள், அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. தவெகவுடன் கூட்டணி அமைக்கத் தவறியது, ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரியதற்காக மாநிலத் தலைமை விடுத்த மிரட்டல், வேட்பாளர் தேர்வில் நிலவிய குளறுபடிகள் என அவர் முன்வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், தமிழக காங்கிரஸ் தலைமையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே.விஜய் இளஞ்செழியன் தனது முகநூல் பதிவில் கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்காதது ஏன்? உண்மையான காங்கிரஸ்காரனாக நான் இந்த பதிவை பதிவிடுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள இன்றைய காங்கிரஸ் நிலைமைக்கு யார் காரணம்?

பிப்ரவரி 16ஆம் தேதி எனது தலைமையில் நடந்த திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அனைத்து தொண்டர்களும் இணைந்து அடுத்த தமிழகத்தில் அமையவருக்கும் ஆட்சியில் காங்கிரசுக்கு ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் பங்கு பெற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிவகை செய்ய வேண்டும் என தீர்மான நிறைவேற்றியதற்கு, என் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று என்னிடம் தொலைபேசியில் கூறிய செல்வப்பெருந்தகை அவர்களுக்கு இந்த தோல்வி சமர்ப்பணம்.

காங்கிரஸ் + தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்பிய ராகுல் காந்தி அவர்களுக்கு துணையாக நின்ற கே.சி.வேணுகோபால், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் அருள் பெத்தையா அவர்களுடைய அரசியல் யூகத்திற்கு என்னுடைய சல்யூட். தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டதற்கு பலரின் சுயநலமே காரணம்.

தொண்டர்களின் கருத்துக்கு கொஞ்சம் கூட செவிசாய்க்காத தலைவர்களே காரணம். பென்னாகரம் தொகுதி- கட்சிக்கு சம்பந்தம் இல்லாத வேட்பாளர் தமிழ் குமரன் இன்று மூன்றாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இவருக்கு யார் சீட் கொடுத்தது? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல ஆகிவிடும். ஆனால், இன்றே விழித்துக்கொள்ளாவிட்டால் 140 வருட கட்சி மறைந்துவிடும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago