முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்து அவர் அவசர அவசரமாக சிங்கப்பூர் பறந்த விவகாரமும்தான் இப்போதைய ஹாட் டாபிக். “ரோடே போடாமல் கோடிக்கணக்கில் டெண்டர் பணம் சுருட்டப்பட்ட” விவகாரத்தில், கைது பயம் காரணமாகவே அவர் நெஞ்சுவலி நாடகமாடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா என்ற காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
‘ரோட்டைக் காணோம்’ வதந்தி
பொதுவாகவே தமிழகத்தில் சாலை டெண்டர் என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்பது எழுதப்படாத விதியாக விவரிக்கப்படுகிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் விவகாரம் வடிவேலுவின் புகழ்பெற்ற ‘கிணற்றைக் காணோம்’ காமெடி பாணியில், ‘ரோட்டையே காணோம்’ என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
கரூர் மாவட்டத்தின் ஈசானத்தம் சாலை விவகாரத்தில், அங்கு சாலையே அமைக்கப்படாமல், ஒப்பந்ததாரர்களுக்கு முதல் தவணையாக ₹2 கோடியே 12 லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக ₹1 கோடியே 26 லட்சம் ரூபாயும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. கரூரில் உள்ள 30 டெண்டர்களில் 20 டெண்டர்கள் ‘சங்கரானந்த்’ என்ற குறிப்பிட்ட ஒரே நிறுவனத்திற்கு அள்ளிக் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் எ.வ.வேலுவின் ஆசி பக்கா காப்பீடாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இமாலய ஊழலை ‘அறப்போர் இயக்கம்’தான் ஆதாரத்தோடு தோண்டி எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் கையில் ஒப்படைத்தது. அறப்போர் இயக்கம் விடாமல் துரத்தியதால், தவற்றை மறைப்பதற்காக இரவோடு இரவாக அவசர அவசரமாக போலீஸ் பாதுகாப்போடு அங்கே மீண்டும் ரோடு போட்டு பூசி மெழுகப் பார்த்திருக்கிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ரைடு
புகார்கள் வலுத்ததை அடுத்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழகம் முழுவதும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர. இந்த சோதனையில் ₹40 லட்சம் ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு பயந்து சிங்கப்பூருக்கு ஓட்டமா?
லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை தீவிரமடைவதையும், கைது நடவடிக்கையையும் முன்கூட்டியே மோப்பம் பிடித்த எ.வ.வேலு, சம்மன் கையில் கிடைப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அவசர அவசரமாக சிங்கப்பூருக்கு விமானம் ஏறிவிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நாளில் அவர் வராததால், அவருடைய வழக்கறிஞர்கள் பட்டாளம் ஆஜராகி, எ.வ.வேலு கைப்பட எழுதி அனுப்பிய விளக்கக் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்து கால அவகாசம் கோரியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “நான் ஜூன் 27 முதல் சிங்கப்பூரில் உள்ள ‘லைப்லைன் ஹார்ட் சென்டர்’-ல் டாக்டர் ஜெயராம் லிங்கமநாயக்கர் மேற்பார்வையில் இருதய தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் 10 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வந்தவுடன் முழு ஒத்துழைப்பு தருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு அல்லது விசாரணை என்று வந்துவிட்டாலே அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுவலியும், மருத்துவமனை சிகிச்சையும் தானாக வந்துவிடும் என்ற ‘நெஞ்சுவலி சென்டிமென்ட்’ கடிதத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து கமெண்ட்களை தட்டி விடுகிறார்கள்.
எ.வ.வேலு எவ்வளவு தூரம் ஓடி ஒளிந்தாலும், அவர் தமிழகம் திரும்பியவுடன் மீண்டும் சம்மன் அனுப்பி சட்டப்படி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவோம் என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கராராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை முறுகேட்டின் இந்த ரூட் மேப் எங்கே போய் முடியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
