தூய்மையான நிர்வாகம், சாதி, மதமற்ற அரசியல் எனக் கூவிக் கூவி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசின் காவல்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள சாதி ரீதியிலான புகார்கள், அரசியல் அரங்கில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, தற்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் ஐபிஎஸை சுற்றி கூறப்படும் புகார்களால், அரசு அலுவர்கள் கதிகலங்கிப்போய் கிடக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் வரை சென்ற புகார்
இது குறித்துப்பேசிய அரசு அலுவலர்கக்ல் சிலர், ”முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐபிஎஸ் இருந்தபோதே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர் மீது அடுக்கடுக்கான கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசியல் விசுவாசம் எனப் பல புகார்கள் அவர் மீது எழுந்த வண்ணம் இருந்தன.
இதற்கெல்லாம் உச்சமாக, தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. “சென்னையில் விஜய் பிரசாரத்தின் போது, மீண்டும் ஒரு ‘கரூர் துயரத்தைப்’ போன்ற அசம்பாவித சம்பவத்தை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்” என தவெக தலைமையே கொதித்தெழுந்தது. அருண் ஐபிஎஸ்-ஐ உடனடியாக அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று தவெக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடமே அதிகாரப்பூர்வமாகப் புகாரும் அளிக்கப்பட்டது.
‘இன்னா செய்தாரை ஒருத்தர்…’
அரசியல் களத்தில் தவெக-விற்கே நெருக்கடி கொடுத்த அதே அருண் ஐபிஎஸ், தவெக ஆட்சி அமைந்தவுடன் ஓரங்கட்டப்படுவார் என்றே பலரும் கணித்திருந்தனர். ஆனால், அங்குதான் அரசியல் ட்விஸ்ட் அரங்கேறியது. விசிக தலைவர் திருமாவளவனின் கடுமையான சாதிப் பாச சிபாரிசின் காரணமாக, “இன்னா செய்தாரை ஒருத்தர் என்ற குறலுக்கேற்ப, அவர் நாண நன்னயம் செய்து விட்டார் விஜய். அருண் ஐபிஎஸ்-க்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் என்கிற அதிமுக்கியமான துறையை வாரி வழங்கினார்.
“திமுக அரசுக்கு அணுக்கமாக, விசுவாசமாக இருந்த ஒரு அதிகாரி, எப்படி தவெக அரசுக்கு விசுவாசமாக, நன்மை பயக்கும் விதமாக நடந்து கொள்வார்?” என அன்றே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடுமையான விவாதங்கள், சந்தேகங்கள் கிளம்பின.

‘அதிர வைக்கும் சாதி நெட்வொர்க்’
“ஆட்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வார் அருண் ஐபிஎஸ்” என நம்பியிருந்தால் அவர் தற்போது தனது விசுவாசத்தை தான் சார்ந்த சாதிக்கு காட்டி வருகிறார். இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியங்களை உடைக்கும் வகையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. திமுக தலைமையின் நெருங்கிய சொந்தக்காரர் நடத்தி வரும் ஒரு பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரியும் நபர், அருண் ஐபிஎஸ்-இன் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்தச் செய்தியாளர் மூலமாக, தற்போதைய அரசின் முக்கியத் துறைகளில் உயர் பதவிகளில் இருக்கும் தங்களது சாதியைச் சேர்ந்த அரசு அலுவலர்களைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் வேலைகள் திரைமறைவில் நடக்கிறது. தவறு செய்யும் தங்களது சாதி அதிகாரிகளுக்கு அரணாக இருப்பதும், அவர்களைப் பெரிய வழக்குகளில் இருந்து காப்பாற்றும் முயற்சியிலும் இந்த இருவர் தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் அம்பலமான லீக்’
பல்வேறு துறைகளைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை மாநிலம் தழுவிய சோதனைகளைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. இதற்கு ஒரு மிகச்சிறிய உதாரணமாக, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடிச் சோதனை நடத்தியது. ஆனால், ராமநாதபுரத்தில் சோதனை நடப்பதற்கு முன்பாகவே, குறிப்பிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சார்பதிவாளர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் மட்டத்திலிருந்து ‘ரெய்டு வரப்போகிறது’ என்ற ரகசியத் தகவல் முன்கூட்டியே பாஸ் செய்யப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்த அடுத்த கணமே, அந்தச் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சார்பதிவாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தந்திரமாக விடுப்பில் சென்றுவிட்டனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த உள்விவகார நெட்வொர்க் தெரியாமல், வழக்கம் போலப் பணிக்கு வந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சார்பதிவாளர்கள் சோதனையில் அப்பட்டமாகச் சிக்கிக் கொண்டனர்.
அரசுக்கே சவால் விடும் சாதி பாசம்
“ஊழல்வாதிகளை ஒடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புச் சோதனையில்கூட, தப்பிப்பதற்கும் மாட்டிக் கொள்வதற்கும் சாதியே தகுதியாக, சாதகமாக மாற்றப்பட்டுள்ளது” என நேர்மையான அரசு அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திமுக ஆட்சியில் விசுவாசம், தவெக ஆட்சியில் சாதிப் பாசம் எனத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் அருண் ஐபிஎஸ்-இன் இந்த இரட்டை வேடப் போக்கையும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியங்கள் சாதி அடிப்படையில் கசிவதையும் முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளப் போகிறார்? இந்த சாதி நெட்வொர்க் மீது முதல்வர் விஜய் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
