Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கோவையில் நடைபெற்ற சொகுசு மற்றும் பழமையான கார்கள் கண்காட்சி, வாகன ரசிகர்களின் பேராதரவுடன் கோலாகலமாக நடைபெற்றது.

கோவை செட்டிபாளையத்தில் உள்ள கேரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே வளாகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட உலகத் தரம் வாய்ந்த சொகுசு மற்றும் விண்டேஜ் கார்கள் அணிவகுத்து காட்சிப்படுத்தப்பட்டன.

லம்போர்கினி, ஆடி, ஜாகுவார், போர்ஷே, ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளிட்ட உயர்ரக சொகுசு கார்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக, இறக்கைகளை விரித்த மஞ்சள் பறவையைப் போல தோற்றமளித்த சைபர்ஸ்டர் ரக கார், கார் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.

அதேபோல், பல தசாப்தங்கள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க விண்டேஜ் கார்கள் தங்களின் அசல் கம்பீரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த பச்சை நிற ஷெவர்லே கார், கருப்பு நிற பிளைமவுத் கார் மற்றும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட பியட் பத்மினி கார் உள்ளிட்ட பழமையான வாகனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதையும் படியுங்க  "யார்டா என் நம்பர எடுத்தது? இனி அந்த கவலை வேண்டாம்! WhatsApp அதிரடி!"

பந்தயப் பாதையில் அதிவேகமாக சீறிப்பாய்ந்த சொகுசு கார்கள் மற்றும் ரேஸ் கார்கள், ரசிகர்களை பரவசப்படுத்தின. சில கார்கள் சைலன்சர்களில் நெருப்பைப் பறக்கவிட்டு தங்களது அதிரடி திறனை வெளிப்படுத்தியதும் இளைஞர்களின் உற்சாகத்தை அதிகரித்தது.

ரேஸ் கார்களை நேரில் பார்ப்பது மட்டுமல்லாமல், அவற்றில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொழில்முறை ஓட்டுநர்களுடன் ரேஸ் கார்களில் பயணித்த பார்வையாளர்கள், டிரிஃப்ட் உள்ளிட்ட சாகச ஓட்ட அனுபவத்தை பெற்று மகிழ்ந்தனர். இந்த அனுபவம் பலருக்கும் மறக்க முடியாத நினைவாக அமைந்தது.

நவீன சொகுசு கார்களில் இடம்பெற்றுள்ள அதிநவீன பாதுகாப்பு வசதிகள், கண்கவர் உட்புற வடிவமைப்புகள் மற்றும் பிரம்மாண்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகளை பார்வையாளர்கள் வியப்புடன் ரசித்தனர்.

தங்களுக்கு மிகவும் பிடித்த போர்ஷே 911, ஜாகுவார், லம்போர்கினி உள்ளிட்ட கனவு கார்களை ஒரே இடத்தில் கண்ட இளைஞர்கள் மற்றும் வாகனப் பிரியர்கள், உற்சாகக் குரலெழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தங்களுக்குப் பிடித்த கார்களின் அருகில் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இதையும் படியுங்க  இரத்த சோகையை குறைத்து, ஹீமோகுளோபினை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

கண்காட்சியில் கார்கள் மட்டுமல்லாமல், கவாசாகி உள்ளிட்ட விலை உயர்ந்த ரேஸ் பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டு மோட்டார் சாகச ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்டேஜ் கார்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் மிக அருகில் நின்று ரசிக்கும் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு வழங்கியதால், கண்காட்சி அரங்கம் முழுவதும் வாகன ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் களைகட்டியது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago