இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் தனது இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ரயில் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு தயாராகியுள்ளது.
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையான (ICF) தயாரித்துள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், 1200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் 10 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக ஜிந்த் நகரில் 3,000 கிலோ கொள்ளளவு கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,600 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த ரயில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வேதிவினை மூலம் மின்சாரத்தை உருவாக்கி இயங்குகிறது. இதனால் நச்சுப் புகை வெளியேறாமல், தூய்மையான நீராவி மட்டுமே வெளியேறுவதால் இது முழுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த, பூஜ்ஜிய காற்று மாசுபாடு கொண்ட ரயிலாக விளங்குகிறது.
நகர்ப்புற மெட்ரோ ரயில்களை ஒத்த நவீன வடிவமைப்பு, தானியங்கி கதவுகள் மற்றும் குளிர்சாதன வசதிகளும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் 2070-ஆம் ஆண்டுக்குள் “நெட் ஜீரோ” கார்பன் வெளியேற்ற இலக்கை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பசுமை ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயிலின் மூலம், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
