வாடகைத் தாய் (Surrogacy) மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஷமீம் அகமது இந்த உத்தரவை வழங்கியதுடன், தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் முக்கிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த நந்தினி தேவி – சரவணன் தம்பதியினர், மருத்துவக் காரணங்களால் கருப்பை அகற்றப்பட்ட நிலையில், சட்டப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து, அதற்கான தகுதிச் சான்றிதழையும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்றிருந்தனர்.
இதையடுத்து, பிறக்கவுள்ள குழந்தைக்கான பெற்றோர் உரிமை மற்றும் பாதுகாப்பு கோரி நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களைக் குறிப்பிட்டு அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது.
மேலும், தகுதி வாய்ந்த அரசு அதிகாரிகள் வழங்கிய தகுதிச் சான்றிதழ்களை (Eligibility Certificate) மறுமதிப்பீடு செய்யவோ அல்லது அவற்றின் செல்லுபடியாக்கத்தை ஆய்வு செய்யவோ மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான பெற்றோர் உரிமை மனுக்களை விசாரிக்கும் போது, தம்பதியரின் அடையாளம், வாடகைத் தாய் மற்றும் அவரது கணவரின் முழுமையான சுயவிருப்ப சம்மதம், மேலும் இது வணிக ரீதியிலான வாடகைத் தாய் ஏற்பாடு அல்ல என்பதற்கான உறுதிமொழி ஆகியவற்றை மட்டுமே நீதிமன்றங்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் போலியாக இருப்பது, பண மோசடி, குழந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகள் இருந்தால் மட்டுமே விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களிலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதன்மை மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
