”அடுத்து வரும் தேர்தலில் விஜய் 35அல்ல.. 60 விழுக்காடு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். விஜய் குறித்து துரை வைகோவாக அல்ல மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறேன்” என மதிமுக எம்.பி., துரை.வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர் பிரிவான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பேரவை சார்பில் மாநிலத் தலைவர் வெங்கடேஸ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கோரிக்கையான 5,493 பேருக்கு ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்த வலியுறுத்தி கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, மாநில பொதுச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை உரையாற்றினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கஜேந்திரன், அக்னிராஜ், ரெகையாபேகம், மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சேரன், உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.பி துரை.வைகோ. ”எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதிகளில் தேர்ச்சி பெற்றும், கடந்த பல ஆண்டுகளாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைக்காமல் 5,000-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களுக்காக சட்டமன்றத்திலும், அமைச்சர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் மின்வாரியத்துறை அமைச்சர் சகோதரர் நிர்மல் குமார் மற்றும் முதலமைச்சர் சகோதரர் விஜய் ஆகியோரைச் சந்தித்து இந்த விடுபட்ட கேங்மேன்களின் நிலையை விளக்கியதைத் தொடர்ந்து, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் இவர்களுக்கான பணியாணையும் சேர்க்கப்பட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு புதிய அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் முதலமைச்சரைச் சந்தித்த போது திருச்சிக்கு மெட்ரோ ரயில், கந்தர்வகோட்டை தொகுதியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த அரசு மருத்துவமனை மற்றும் ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனை குறித்து கோரிக்கைவைக்கபட்டது. கோரிய 24 மணி நேரத்திற்குள், அங்கு புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் செயல்படக்கூடிய அமைச்சர்களாக உள்ளனர்.
முதலமைச்சர் ஏன் பேச மாட்டேங்கிறார் என கேட்கின்றனர். அவர் பேசுபவர் அல்ல செயல்படுபவர் என நான் கூறி இருந்தேன் அதன் அடிப்படையில் செயல்படும் முதலமைச்சர் ஆக விஜய் உள்ளார். தற்போது வேலை வாய்ப்பாக இருந்தாலும் எந்த ஒரு பணியாக இருந்தாலும் தகுதியின் அடிப்படையில் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றம் தொடர வேண்டும். விஜய் அடுத்து வரும் தேர்தலில் 35 அல்ல 60 விழுக்காடு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வைகோ, விசிக மற்றும் தேமுதிகவிற்கு கிளைக் கழகம் இல்லாத கட்சி என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு? ”திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஒரு நபராக உள்ளார். எனவே, யாரையும் குறைத்து பார்க்க முடியாது. வைகோ ஏதோ ஒரு விதத்தில் கூறியிருப்பார். தேமுதிக மக்கள் நல கூட்டணியில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது.
எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை திமுக உருவாக்கவில்லை. எங்கள் சின்னத்தில் நாங்கள் போட்டி போடவில்லை. உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். இது போன்ற சங்கடங்கள் உருவாகியுள்ளது. எனவே பிற இயக்கங்கள் குறித்து நாங்கள் கூறவில்லை. நட்புறவோடு உள்ளோம்.
டிரான்ஸ்பார்மர் டெண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது மேலும் 9 டெண்டர்களின் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார் இது குறித்த கேள்விக்கு. ”பல்வேறு துறைகளில் பல்வேறு முறை கேடுகள் உள்ளது. அதற்கான நீதி விசாரணை நடக்கும்போது தெரியவரும்” எனக் கூறினார்.
-ஜான் கண்ணா- திருச்சி நிருபர்
